நாடாளுமன்ற தேர்தல் வரை ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்
வரும் நாடாளுமன்ற தேர்தல் வரையாவது ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற திமுக வழக்கறிஞர் புருஷோத்தம் இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர், "தமிழ்நாட்டில் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இட ஒதுக்கீடுகளை பார்த்தால், ஆண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்கும் அளவிற்கு நிலைமை உள்ளது" "இதை நான் வருத்தத்துடன் சொல்லவில்லை. பெருமையுடன் சொல்லுகிறேன்.இதுதான் திராவிட மாடல்". "பெரிய, பெரிய மாளிகையில் வீணான பதவியில் அமர்ந்து கொண்டு திராவிடம் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு, இந்த திருமணமே(சுயமரியாதை திருமணம்) திராவிடம்" என பேசினார்.
திராவிடம் என்றால் என்ன என்று கேட்க வைத்தது திராவிடம்
மேலும் பேசி முதல்வர், திராவிடம் என்றால் என்ன என்று கேட்க வைத்ததுதான் திராவிடம் என தெரிவித்தார். "கடந்த இரண்டு நாட்களாக அவர் என்ன பொய் பேசி வருகிறார் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். என்னை பொறுத்தவரையில் அவரே அப்பதவியில் தொடர வேண்டும். அது நம் பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கிறது". "நான் பிரதமர் மற்றும் ஒன்றிய அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன், ஆளுநர் பதவியில் இருந்து இவரை மாற்ற வேண்டாம். வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரையாவது இவர் தொடர வேண்டும்" என பேசினார். மேலும் அவர் அடுத்த ஆண்டு நடைபெறும், நாடாளுமன்ற தேர்தல்களை முன்னிட்டு வெளியான கருத்துக்கணிப்புகளை சுட்டிக்காட்டி, திமுக வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார்.
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில், ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதிலடி
தற்போது முதல்வர் ஸ்டாலின் பேசியது, ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஆளுநர் மாளிகைக்கு நடந்து கொண்ட விதத்திற்கு எதிர்வினையாக பார்க்கப்படுகிறது. பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஆளுநர் மாளிகை வழங்கி இருந்த புகாரில், பெட்ரோல் குண்டு வீச்சில் ஆளுநர் மாளிகை முகப்பு முழுவதும் சேதம் அடைந்தது எனவும், ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் எனவும், தமிழ்நாட்டில் ஆளுநர் அச்சத்தில் பணியாற்றுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ள தமிழ்நாடு காவல்துறை, பெட்ரோல் குண்டு வெடிக்கவே இல்லை எனவும், சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், ஆளுநர் மாளிகை அளித்துள்ள புகாரில் கூறப்பட்டது போல் எதுவும் நடக்கவில்லை எனவும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.