Loading...
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

எழுதியவர் Vasuki
Nov 18, 2026
05:19 pm

செய்தி முன்னோட்டம்

'அக்வான்' புயலின் நகர்வில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு பரவலாக லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்புள்ளதாகவும், வரும் நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, நாளை மறுநாள் பிற்பகல் ஆந்திராவின் நெல்லூர் - விசாகப்பட்டினம் இடையே அக்வான் புயல் கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் திசை மாறி மச்சிலிப்பட்டினம் - ஒடிசாவின் பூரி இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் புதிய கணிப்பை வெளியிட்டுள்ளது.

எச்சரிக்கை

அடுத்த நாட்களுக்கான மழை நிலவரம்

புயலின் பாதையில் ஏற்பட்டுள்ள இந்த வானிலை மாற்றத்தால், இன்றும் நாளையும் (நவ. 18, 19) தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் (நவ. 20) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

அதனைத் தொடர்ந்து, வரும் நவம்பர் 23-ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெல்டா

டெல்டா மாவட்டங்களில் நீடிக்கும் கனமழை

நவம்பர் 23-ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களை நனைக்கவுள்ள மழை, மறுநாளான நவம்பர் 24-ஆம் தேதியும் கடலோர மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் நீடிக்கவுள்ளது.

அன்றைய தினம் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த வாரம் மீண்டும் கனமழை பெய்யவுள்ளதால், டெல்டா மற்றும் தென் மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT