வெள்ள நிவாரணத் தொகையாக பிரதமரிடம் ₹12,000 கோடி கோரினார் முதல்வர் ஸ்டாலின்
கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் தென் தமிழ்நாட்டின் பல பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் ₹12,000 கோடியை முதல்வர் ஸ்டாலின் கேட்டுள்ளார். டெல்லியில் நேற்று மாலை பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், மாநிலத்தின் வெள்ள பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார். பின்னர், உடனடி மீட்பு பணிகளுக்காக ₹7,300 கோடியை கோரினார். "உடனடி நிவாரணத்துக்கு ₹7,300 கோடியும், நிரந்தர நிவாரணத்துக்கு ₹12,000 கோடியும் கேட்டிருக்கிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக ₹6,000 அறிவித்துள்ளோம். இது விநியோகிக்கப்படுகிறது. பிரதமரிடம் இருந்து நிவாரண நிதி கிடைத்தால் தான், நிவாரண பணிகளை முழுமையாக முடிக்க முடியும்," என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வெள்ளத்தில் சிக்கிய 12,553 பேர் மீட்பு
இந்த மாதத்தின் முதல் வாரத்தில் வட தமிழக கரையோர மாவட்டங்களை புரட்டிப்போட்ட மழை, இரண்டு நாட்களாக தென் தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களை வெள்ளக்காடாகியது. இந்நிலையில், மீட்பு பணிகள் போர்க்கள அளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய முதல்வர், மழை குறித்து வானிலை ஆய்வு மையம் காலதாமதமாக எச்சரித்ததாக குற்றம் சாட்டினார். மேலும், வெள்ளத்தில் சிக்கிய 12,000க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறினார். "12,553 பேர் மீட்கப்பட்டு 143 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. என்னுடன், தலைமைச் செயலாளரும் நிலைமையை கண்காணித்து, சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளுடன் பேசிவருகிறார்" என தெரிவித்தார்.
மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள 10 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 8 அமைச்சர்கள்
பத்து ஐஏஎஸ் அதிகாரிகளும், 8 அமைச்சர்களும் களத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மாநில பேரிடர் மீட்புப் படையின் (SDRF) 15 குழுக்கள் மற்றும் 10 தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் மற்ற படைகளுடன் களத்தில் உள்ளன. SDRF மூலம் பயிற்சி பெற்ற சுமார் 230 நபர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். திருமண மண்டபங்கள் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில், 1,545 குடும்பங்களைச் சேர்ந்த, 7,500 தங்கியுள்ளனர். மேலும், 84 படகுகள் மீட்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.