அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி மொழி: திமுக - தவெக இடையே வெடித்த புதிய மொழிப்போர்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவர்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் இடம்பெற்றுள்ள விவகாரம், மாநிலத்தில் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் (தவெக) எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே கடுமையான அரசியல் மோதலை உருவாக்கியுள்ளது. கரூர் மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தரப்படும் மருந்து கவர்களில் இந்தியில் குறிப்புகள் அச்சிடப்பட்டுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, "தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மும்மொழி கொள்கை அமலுக்கு வந்துவிட்டது போல! இது மாற்றம் அல்ல நாற்றம்" எனத் தனது எக்ஸ் தளத்தில் கடும் கண்டனத்தைப் பதிவிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#தமிழ்நாடு மருத்துவமனைகளில் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்துள்ளது போல !
— Dr. T R B Rajaa (@TRBRajaa) October 6, 2026
முதலில் கரூர்...
இப்போது கோவையிலும் அதே நிலமை...#HindiImposition #TvkFailsTN #Tvk https://t.co/aFmggGkNAM pic.twitter.com/N2o9ikE8VO
விளக்கம்
கோவை மருத்துவமனை நிர்வாகத்தின் விளக்கம்
கோவை அரசு மருத்துவமனைக்கு அதிகளவில் வரும் வடமாநில தொழிலாளர்களின் வசதிக்காகவே இந்தியில் அச்சிடப்பட்டதாகக் தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், சர்ச்சையைத் தொடர்ந்து இனி பழைய மருந்து கவர்களில் மாத்திரைகள் வழங்கப்படாது என்றும், தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே கொண்ட புதிய கவர்களில் விநியோகிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
திமுகவின் குற்றச்சாட்டிற்குப் பதிலடி கொடுத்துள்ள தவெக, "அண்ணாவின் இருமொழிக் கொள்கையே தவெக அரசின் ஒரே நிலைப்பாடு. கரூர் மருத்துவமனையில் இந்தி இடம்பெற்ற மருந்து கவர்கள் கடந்த 2025 டிசம்பர் மாத திமுக ஆட்சிக் காலத்தில் ஈரோடு கூட்டுறவு சங்க அச்சகத்தில் அச்சிடப்பட்டவை. சொந்த ஆட்சியில் தவறு செய்துவிட்டு, தற்போது மொழி காப்பது போல திமுக நாடகமாடுகிறது" எனச் சாடியுள்ளது.