கிருஷ்ணா நீர் பங்கீடு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் விஜய் இன்று சந்திப்பு
செய்தி முன்னோட்டம்
கிருஷ்ணா நீர் பங்கீடு மற்றும் கோதாவரி - காவேரி நதி நீர் இணைப்புத் திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக, தமிழக முதல்வர் விஜய் இன்று தனி விமானம் மூலம் ஆந்திரப் பிரதேசம் செல்கிறார். ஆந்திர அரசு கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும் 11 டி.எம்.சி. கிருஷ்ணா நீரைத் தமிழகத்திற்கு (சென்னை குடிநீர்த் தேவைக்காக) வழங்க வேண்டும். ஆனால், முறைப்படி இந்த நீர் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதேசமயம், தமிழக அரசு சார்பில் கிருஷ்ணா கால்வாய் பராமரிப்புக் கட்டணமாக ஆண்டுதோறும் ரூ.100 கோடி ஆந்திரா நீர்வளத்துறைக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. இச்சந்திப்பின்போது, முறைப்படி தண்ணீரைத் திறக்க வலியுறுத்துவதுடன், நதிகள் இணைப்புத் திட்டம் குறித்தும் முதல்வர் விஜய் ஆந்திர முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்க உள்ளார்.
பயணத் திட்டம்
இன்றைய பயணத் திட்டம்
முதல்வர் விஜய் உடன் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், தலைமைச் செயலர் சாய்குமார், நீர்வளத்துறை செயலர் பிரசாந்த் வடநேரே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் செல்கின்றனர்.
இக்குழுவினர் இன்று மாலை தனி விமானம் மூலம் விஜயவாடாவில் உள்ள கன்னாவரம் விமான நிலையத்திற்குச் செல்கின்றனர்.
மாலை 4:15 மணிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்துப் பேசுகிறார் முதல்வர் விஜய்.
மாலை 6:00 மணிக்கு விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்க்கை அம்மன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
அதனைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாணை சந்தித்துப் பேசுகிறார்.
அனைத்துப் பணிகளையும் முடித்துவிட்டு இரவு 8:00 மணிக்கு சென்னை திரும்புகிறார்.