பெண் மருத்துவர் கொலை குறித்து தாமாக முன்வந்த உச்சநீதிமன்றம் எடுத்த முடிவு: நாளை விசாரணை
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில், அரசின் போக்கில் அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்றம், தானாக இந்த வழக்கை விசாரிக்க முன்வந்துள்ளது. இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ததுடன், இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதியின் முன் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவரின் மரணத்துக்கு நீதி கேட்டு, சனிக்கிழமை நாடு முழுவதும் மருத்துவர்கள் 24 மணிநேர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கில் இதுவரை
ரக் ஷா பந்தனை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை என்பதால், நாளை தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதற்கிடையே இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு எடுத்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தின் நிபுணர்கள் குழு, முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராயின் உளவியல் பகுப்பாய்வு சோதனையைத் தொடங்கியது. இதற்கிடையே, இந்திய மருத்துவ கூட்டமைப்பின் (ஐஎம்ஏ) மருத்துவர்களின் கோரிக்கைகளில் தலையிடக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக, மேற்கு வங்க அரசு பணியிடங்களில், குறிப்பாக அரசு நடத்தும் மருத்துவமனைகளில் பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க பல நடவடிக்கைகளை அறிவித்ததுள்ளது.