மருத்துவர்களின் 24 மணிநேர நாடு தழுவிய வேலைநிறுத்தம் தொடங்கியது; தமிழ்நாட்டிலும் போராட்டம்
கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்தியா முழுவதும் மருத்துவர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவத் துறை ஊழியர்கள் பலரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நாடு முழுவதும் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த போராட்டத்தின்போது மருத்துவமனைகளில் வழக்கமான வெளிநோயாளி பிரிவுகள் எதுவும் செயல்படாது. மேலும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகளும் நடத்தப்படாது. விபத்து மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் மட்டும் பராமரிக்கப்படும் என்று போராட்டத்தை வழிநடத்தும் இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிலும் மருத்துவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி இந்தப் போராட்டத்தில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்திய மருத்துவ சங்கத்தின் ஐந்தம்ச கோரிக்கை
இந்திய மருத்துவ சங்கம் இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. 36 மணி நேர பணி ஷிப்ட் உட்பட, ரெசிடெண்ட் மருத்துவர்களின் பணி மற்றும் வாழ்க்கை நிலைமைகள் பற்றிய முழுமையான மறுசீரமைப்பு இதில் அடங்கும். முதல் கட்டமாக கட்டாய பாதுகாப்பு உரிமைகளுடன் மருத்துவமனைகளை பாதுகாப்பான மண்டலங்களாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது. ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவில் கற்பழிப்பு-கொலையை உன்னிப்பாகவும் தொழில் ரீதியாகவும் விசாரித்து நீதி வழங்க வேண்டும் என்றும் மருத்துவர்களின் அமைப்பு கேட்டுக் கொண்டது. மருத்துவமனை வளாகத்தை நாசப்படுத்தியவர்களை அடையாளம் கண்டு முன்மாதிரியான தண்டனை வழங்கவும் வலியுறுத்தியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு ஏற்ப உரிய மற்றும் கண்ணியமான இழப்பீடு வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.