நெருங்கிய இரத்த உறவுகளுக்குள் திருமணம்: தகுந்த சட்டம் இயற்றப் பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
செய்தி முன்னோட்டம்
நெருங்கிய இரத்த உறவுகளுக்குள் நடைபெறும் திருமணங்களைக் கட்டுப்படுத்த தகுந்த சட்டம் இயற்றுவது குறித்துப் பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை இம்மனுவை விசாரித்தது. சமூக சீர்திருத்தச் சட்டம் இயற்றுவது நாடாளுமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் மத்திய அரசுக்கு உத்தரவிடப் போவதில்லை என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இவ்விவகாரத்தின் தீவிரத்தை உணர்த்துவதற்கும் பாடத்திட்டம் உள்ளிட்ட வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்படுவதாக அமர்வு கூறியது.
பொதுநல மனு
40% பார்வைக் குறைபாடு கொண்ட பெங்களூரு சட்ட மாணவி தாக்கல் செய்த பொதுநல மனு
நெருங்கிய உறவினர் திருமணத்தின் மூலம் பிறந்து 40 சதவீதப் பார்வைக் குறைபாடு கொண்ட பெங்களூரு சட்ட மாணவி சார்வி எஸ் இம்மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
பாரம்பரிய வழக்கம் என்ற பெயரில் பிறக்கும் குழந்தைகளைத் தவிர்க்கக்கூடிய மரபணு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவதை சட்டம் தொடர்ந்து அனுமதிக்க வேண்டுமா என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இரத்த உறவுத் திருமணங்களால் மரபணுக் குறைபாடுகள், பிறவி அசாதாரணங்கள், புலன் குறைபாடுகள் மற்றும் சிசு மரணம் அதிகரிப்பதாக மருத்துவ ஆய்வுகளை மேற்கோள் காட்டி வாதிடப்பட்டது.
திருமணம் தனிப்பட்ட விருப்பம்
விளைவுகளை அறிந்து முடிவெடுக்க வேண்டும் என அமர்வு கருத்து
கிராமப்புறங்களில் விளைவுகளை அறியாமல் உறவினர்களுக்குள் திருமணம் நடைபெறுவது அதிகரித்து வருவதால் போதிய பாதுகாப்புகள் தேவை என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதற்குப் பதிலளித்த நீதிபதிகள் அமர்வு, திருமணம் என்பது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது என்றும், தனிநபர்கள் விளைவுகளை அறிந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டது.
மேலும் எச்ஐவி தொற்று உள்ளவரைத் திருமணம் செய்வது தொடர்பான முந்தைய வழக்கில் தனிப்பட்ட விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளித்து வழங்கப்பட்ட தீர்ப்பையும் நீதிமன்றம் நினைவுகூர்ந்தது.
திருமனச் சட்டம்
இந்து திருமணச் சட்டம் பிரிவு 5(iv), 5(v) மற்றும் திருமணத்திற்கு முந்தைய மரபணு ஆலோசனைக் கோரிக்கை
இந்து திருமணச் சட்டம் 1955-ன் பிரிவு 5(iv) மற்றும் 5(v) ஆகியவற்றின் கீழ் தடைசெய்யப்பட்ட மற்றும் சபிண்டா உறவுகளுக்குள் வழக்காறு அடிப்படையில் திருமணம் செய்ய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விலக்குகள் திருமணத்திற்கு முந்தைய மரபணு ஆலோசனை மற்றும் மருத்துவப் பரிசோதனை போன்ற பொது சுகாதாரப் பாதுகாப்புகளுடன் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற திருமணங்களைக் குற்றமாக்கவோ அல்லது அவற்றின் சட்டப்பூர்வ அந்தஸ்தை பாதிக்கவோ இக்கோரிக்கை முன்வைக்கப்படவில்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.