சென்னையின் பல்வேறு இடங்களில் திடீரென பெய்த கனமழை; நாளையும் மழை உண்டு!
தமிழகத்தில் இன்று (அக்டோபர் 30) 8 மாவட்டங்களில், நாளை (அக்டோபர் 31) 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கேற்றாற் போல இன்று காலை முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் தென் மாநிலங்களின் கிழக்கு கடலோர பகுதிகளின் மீது, தென்மேற்கு அரபிக் கடலின் மேல் இரண்டு வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
Twitter Post
நாளை தீபாவளி அன்றும் மழை உண்டு
நாளை (அக். 31), மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேக மூட்டமாக இருக்கக் கூடும் எனவும் சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. இன்று காலை அண்ணா நகரில் ஒரு மணிநேரத்தில் 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அம்பத்தூர், மதுரவாயல், கொளத்தூர், கொரட்டூர், பாடி, வளசரவாக்கம், எம்.ஆர்.சி., நகர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடைசி நிமிட தீபாவளி பொருட்கள் விற்பனைப் பாதிக்கப்பட்டுள்ளது.