Loading...
Belonging: சுயசரிதை புத்தகத்தில் 2004-இல் பிரதமர் பதவியை நிராகரித்தது ஏன் என்ற உண்மையை வெளிப்படுத்தியுள்ளார் சோனியா காந்தி
'Belonging: A Journey of Love' என்ற தனது சுயசரிதை புத்தகத்தை சோனியா காந்தி வெளியிட்டுள்ளார்

Belonging: சுயசரிதை புத்தகத்தில் 2004-இல் பிரதமர் பதவியை நிராகரித்தது ஏன் என்ற உண்மையை வெளிப்படுத்தியுள்ளார் சோனியா காந்தி

எழுதியவர் Venkatalakshmi V
Nov 10, 2026
05:21 pm

செய்தி முன்னோட்டம்

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி, சமீபத்தில் வெளியிட்ட 'Belonging: A Journey of Love' என்ற தனது சுயசரிதை புத்தகத்தில், கடந்த 2004-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் UPA வெற்றி பெற்ற பிறகும் தான் ஏன் பிரதமர் பதவியை ஏற்க மறுத்தேன் என்பது குறித்த பல முக்கிய இரகசியங்களை வெளிப்படுத்தியுள்ளார். கட்சித் தலைவர்களுடனான தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகு, தனது "உள்மனதின் குரலை" கேட்டு பிரதமர் பதவியை ஏற்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்ததாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி

"சோனியா, உனக்கு உண்மையாய் இரு!"

பிரதமர் பதவியை நிராகரிப்பது குறித்து தனக்குள் ஏற்பட்ட மனப்போராட்டம் பற்றிப் புத்தகத்தில் எழுதியுள்ள சோனியா காந்தி, " 'சோனியா, உனக்கு நீ உண்மையாய் இரு... உனக்கு இது ஏற்கனவே தெரியும், விட்டுவிடு!' என்று என் உள்மனம் எனக்குத் தெளிவாகக் கூறியது".

"இந்த முடிவை எடுத்த சில மணிநேரங்களில் என் மகன் ராகுல் காந்தியின் அறைக்குச் சென்று, 'நான் என் முடிவில் உறுதியாக இருக்கிறேன்' எனக் கூறினேன். உடனே அவர் என்னை அணைத்துக் கொண்டு, 'இது சரியான முடிவு அம்மா' என்று கூறினார்" என எழுதியுள்ளார்.

பின்னணி

குழந்தைகள் ராகுல் - பிரியங்காவின் எதிர்ப்பு பின்னணி

பாட்டி இந்திரா காந்தி மற்றும் தந்தை ராஜீவ் காந்தி ஆகிய இருவரின் கொடூர படுகொலைகளையும், அந்த அதிர்ச்சிகரமான இழப்புகளையும் நேரில் கண்டு வளர்ந்ததால், ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தி வதேராவும் சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்பதை கடுமையாக எதிர்த்ததாக புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களது மனதில், பிரதமர் பதவி என்பது உயிருக்கு ஆபத்தான ஒன்றுடன் நேரடியாகத் தொடர்புடையதாகவே ஆழமாகப் பதிந்திருந்தது. சோனியா காந்தியின் முடிவால் அவர்கள் பெரும் நிம்மதியடைந்தனர்.

ADVERTISEMENT

மன்மோகன் சிங்

மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டது ஏன்?

பிரணாப் முகர்ஜி போன்ற பல மூத்த தலைவர்கள் பிரதமர் பதவிக்கு தயாராக இருந்தபோதிலும், டாக்டர் மன்மோகன் சிங்கை தேர்வு செய்ததற்கான காரணத்தையும் சோனியா விவரித்துள்ளார்.

மன்மோகன் சிங் எவ்வித கறையுமற்ற நேர்மையானவர்; 1990-களின் தொடக்கத்தில் நரசிம்ம ராவ் அரசில் நிதி அமைச்சராக பொருளாதாரச் சீர்திருத்தங்களை முன்னெடுத்தவர்.

அவர் எந்தவொரு உள்கட்சி அமைப்பிலும் இல்லாதவர். மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைந்ததால், பொருளாதாரக் கொள்கைகள் தொய்வின்றித் தொடரும் என்பதை நாட்டு மக்களுக்கு உறுதிப்படுத்த மன்மோகன் சிங்கின் தேர்வே சரியானது என சோனியா கருதினார்.

ADVERTISEMENT

பின்சீட் டிரைவர்

'பின்சீட் டிரைவர்' குற்றச்சாட்டிற்கு பதிலடி

குடியரசு தலைவர் மாளிகையில் ஆட்சி அமைக்க உரிமை கோர செல்லும் முன், மன்மோகன் சிங், மற்ற எல்லோரையும் போலவே சோனியா தான் பிரதமராக போகிறார் என்றே நினைத்திருந்தார் என்றும் சோனியா கூறியுள்ளார்.

அதேபோல, UPA ஆட்சிக் காலத்தில் மன்மோகன் சிங்கை இயக்கும் "பின்சீட் டிரைவராக" சோனியா செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டையும் அவர் முற்றிலும் நிராகரித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவராக தனது கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கினாலும், அரசாங்கத்தின் முடிவுகளில் பிரதமரான மன்மோகன் சிங்கின் அதிகாரத்திற்கே தான் முழு முன்னுரிமை அளித்ததாகச் சோனியா காந்தி தனது சுயசரிதையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

ADVERTISEMENT