ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழை எதிரொலி: பள்ளிகள் மூடல், 140 ரயில்கள் ரத்து
ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் குறைந்தது 19 பேர் இறந்துள்ளனர், மேலும் 17,000 க்கும் மேற்பட்டோர் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதோடு சுமார் 140 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, பல ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மாநிலத்தில் பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை மேலும் தொடருமென வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹைதராபாத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று, திங்கள்கிழமை மூடப்பட்டிருக்கும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஐடி நிறுவனங்கள் பலவும் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய வலியுறுத்தியுள்ளது.
ரயில் பயணிகள் அவதி
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசி, இரு மாநில நிலவரம் குறித்து கேட்டறிந்தார். வரும் நாட்களில் அதிக மழை எதிர்பார்க்கப்படுவதால், மையத்தின் அனைத்து உதவிகளையும் அவர் அவர்களுக்கு உறுதியளித்தார். தொடர்ந்து இரண்டாவது நாளாக பெய்து வரும் கனமழையால், ஆந்திராவில் குறைந்தது 9 பேரும், தெலுங்கானாவில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் மேலும் 3 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது, தெலுங்கானாவில் ஒருவரைக் காணவில்லை என்று பிடிஐ தெரிவித்துள்ளது. தென் மத்திய ரயில்வே (SCR) 140 ரயில்களை ரத்து செய்துள்ளது மற்றும் 97 ரயில்களை திருப்பிவிட்டுள்ளது. மேலும், கிட்டத்தட்ட 6,000 பயணிகள் பல்வேறு நிலையங்களில் சிக்கித் தவிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.