தமிழக துறைமுகங்களுக்கு வார்னிங்; இந்திய வானிலை ஆய்வு மையம் அலெர்ட்
வங்காள விரிகுடா கடலில் தோன்றியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு துறைமுகங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. இந்நிலையில், திங்கட்கிழமை, சென்னையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் குறித்து புதிய எச்சரிக்கையை தமிழக துறைமுகங்களுக்கு வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு:- நேற்றைய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, செப்டம்பர் 9 ஆம் தேதி வடமேற்கு வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது.
வானிலை முன்னறிவிப்பு
பூரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 50கிமீ தொலைவில் (ஒடிசா), பாரதீப்பில் இருந்து 90கிமீ தென்மேற்கே (ஒடிசா), கோபால்பூருக்கு கிழக்கு-வடகிழக்கே 140கிமீ தொலைவில் (ஒடிசா), 140கிமீ தென்-தென்மேற்கில் சந்த்பாலி (ஒடிசா), 260கிமீ கிழக்கு கிழக்கு கலிங்கப்பட்டினம் (ஆந்திரப் பிரதேசம்) மற்றும் திகாவின் (மேற்கு வங்கம்) தென்-தென்மேற்கில் 260கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது கிட்டத்தட்ட வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 3 மணி நேரத்தில் பூரி அருகே ஒடிசா கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து வடமேற்கு நோக்கி ஒடிசா முழுவதும் நகர்ந்து, மாலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து படிப்படியாக வலுவிழக்க வாய்ப்புள்ளது. பின்னர் அடுத்த 24 மணி நேரத்தில் சத்தீஸ்கர் முழுவதும் மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும்.
புயல் எச்சரிக்கைக் கூண்டு
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டுகளை ஏற்றுவதற்கான அறிவிப்புகளையும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டை வைத்திருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. அதே நேரம், சென்னை, கடலூர் மற்றும் நாகப்பட்டினத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டை ஏற்றுவதோடு, இரண்டு மற்றும் ஒன்றாம் எண்ணுக்கான செக்க்ஷன் சிக்னலையும் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே, ஆந்திராவில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.