புதிய பாம்பன் ரயில் பாலம்: அடுத்த மாதம் பிரதமர் திறந்து வைக்கிறார்
ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடல் பாலத்தை வரும் அக்டோபர் மாதம் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. ராமேஸ்வரம் தீவினை நிலத்தோடு இணைக்கும் பாம்பன் ரயில் பாலம் 1914ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. மிகவும் பிரபலமான இந்த பாலம், இந்தியாவின் முதல் கடல் பாலமாகும். எனினும் கடல் மண் அரிப்பு மற்றும் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக, பழைய பாலம் வலு இழந்து தொடர்ந்து சேதம் அடைந்து வந்தது. இதனால், ரயில் சேவை தொடர முடியவில்லை. இந்த நிலையில், பிரதமர் மோடியின் கீழ் உள்ள மத்திய ரயில்வே அமைச்சகம் புதிய ரயில் பாலம் கட்டும் திட்டத்தை 2019ஆம் ஆண்டு தொடங்கியது.
பாம்பன் பாலத்தின் சிறப்பம்சங்கள்
2021 செப்டம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தாலும், கடல் சீற்றம், வானிலை மாற்றங்கள் மற்றும் கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட காரணங்களால் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த மாதம் புதிய பாம்பன் பாலத்தில் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. புதிய பாம்பன் ரயில் பாலத்தின் நீளம் 2,078 மீட்டர். இதில் 333 கான்கிரீட் அடித்தளங்கள் மற்றும் 101 தூண்கள் உள்ளன. இந்தியாவிலேயே கடலுக்கு நடுவே செங்குத்து வடிவிலான திறந்து மூடும் முதன்மை தூக்குப்பாலமாக உருவாகியிருக்கிறது. இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி முதல் ராமேஸ்வரம் - மண்டபம் இடையே ரயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது என தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் அறிவித்துள்ளார்.