பொங்கல் பண்டிகை அன்று தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
பொங்கல் பண்டிகை அன்று, தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தைப்பொங்கல் திருநாளில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாட்டுப் பொங்கலன்று, தென் தமிழகத்தின் பல பகுதிகளிலும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
மீனவர்கள்
மீனவர்களுக்காக எச்சரிக்கை
ஜனவரி 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் தமிழகத்தின் கடலோர மற்றும் உள்பகுதி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மீனவர்களைப் பொறுத்தவரை வங்காள விரிகுடா, அரபிக் கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை பலத்த காற்று மணிக்கு 35-55 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் இந்த காலகட்டத்தில் மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.