LOADING...
பூஞ்சில் பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரையிழந்த 22 குழந்தைகளை ராகுல் காந்தி தத்தெடுக்கவுள்ளார்
பெற்றோரையிழந்த 22 குழந்தைகளை ராகுல் காந்தி தத்தெடுக்கவுள்ளார்

பூஞ்சில் பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரையிழந்த 22 குழந்தைகளை ராகுல் காந்தி தத்தெடுக்கவுள்ளார்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 29, 2025
02:29 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் பெற்றோர்களையும், குடும்ப ஆதரவாளர்களையும் இழந்து அனாதைகளாகிய 22 குழந்தைகளை தத்தெடுக்கும் நடவடிக்கையை லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்கிறார். இந்த குழந்தைகள் எல்லை மோதலின் போது பாதிக்கப்பட்ட பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இது தொடர்பாக, ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா கூறியது பற்றி 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. அதில், "ராகுல் காந்தி இந்தக் குழந்தைகளின் கல்வி செலவுகளை முழுமையாக ஏற்றுக் கொள்கிறார். அவர்கள் பட்டப்படிப்பு முடிக்கும் வரை அவரது ஆதரவு தொடரும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பள்ளிப்படிப்பைத் தடையின்றி தொடரும் வகையில், முதலாவது நிதி தவணை இவ்வாரம் வழங்கப்படும் என கர்ரா கூறினார்.

விவரங்கள் 

குழந்தைகளிடம் உரையாற்றிய ராகுல் காந்தி

மே மாதம் பூஞ்ச் மாவட்டத்திற்குச் சென்ற ராகுல் காந்தி, ஷெல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பட்டியலை தயாரிக்க உள்ளூர் நிர்வாகிகளை பணித்தார். அந்த பட்டியலின் உண்மை தன்மை பின்னர் அரசாங்க ரெக்கார்டுகளில் சரிபார்க்கப்பட்டதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது. இந்த பயணித்தின்போது, தாக்குதலில் உயிரிழந்த 12 வயது இரட்டையர்கள் உர்பா பாத்திமா மற்றும் ஜைன் அலியின் வகுப்புத் தோழிகளை சந்திக்க கிறிஸ்ட் பப்ளிக் பள்ளிக்கும் ராகுல் காந்தி சென்றிருந்தார். குழந்தைகளிடம் உரையாற்றிய ராகுல் காந்தி, "நீங்கள் இழப்பை எதிர்கொள்கிறீர்கள். ஆனால் நீங்கள் அதைச் சமாளிக்க முடியும். உங்கள் பதிலடி கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்குவதாக இருக்க வேண்டும்," என ஆறுதல் கூறியதாக வெளியீடுகள் தெரிவிக்கின்றன.

பின்னணி

ஆபரேஷன் சிந்தூருக்கு பாகிஸ்தான் பதிலடி தாக்குதல்

கடந்த ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையாக இந்தியா "ஆபரேஷன் சிந்தூர்" எனப்படும் கடுமையான தற்காப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. அதற்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தானும் எல்லை தாண்டிய தாக்குதலில் ஈடுபட்டது. பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்ட பூஞ்ச் பகுதியில், பல்வேறு பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் இருந்து குடும்பத்துடன் தப்பிக்க முயன்ற போது, விஹான் பார்கவ் என்ற சிறுவன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தான். மே 10 அன்று, தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இருநாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க ஒப்புக்கொண்டன.