சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி பகிர்ந்த சுவாரசிய ரகசியம்
செய்தி முன்னோட்டம்
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதிய 'Belonging: A Journey of Love' என்ற 526 பக்கங்கள் கொண்ட சுயசரிதை புத்தகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தனது பெற்றோரின் காதல் நினைவுகளை பகிர்ந்து கொண்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது முன்னாள் காதலி குறித்தும் முதல்முறையாக சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, தனது தாய் மற்றும் தந்தை முதன்முதலில் சந்தித்துக் கொண்ட இடத்திற்கு தனது காதலியை அழைத்துச் சென்ற அனுபவத்தை விவரித்தார்.
சுவாரசிய தகவல்
முன்னாள் காதலி குறித்து ராகுல் காந்தி பகிர்ந்த சுவாரசிய தகவல்
"கேம்பிரிட்ஜில் உள்ள 'வார்சிட்டி' உணவகத்தில்தான் எனது பெற்றோர் முதன்முதலில் சந்தித்து கொண்டார்கள். அவர்களின் காதல் மலர்ந்த இடத்தை பார்க்கும் ஆர்வத்தில், அந்த உணவகத்திற்கு எனது அப்போதைய காதலியை அழைத்துச் சென்றேன்."
"அங்கு அமர்ந்து மெனுவை பார்த்துக் கொண்டிருந்தபோது, 'எனது பெற்றோர் இங்குதான் முதன்முதலில் சந்தித்தார்கள்' என உணவகப் பணியாளரிடம் கூறினேன். உடனே அவர் என்னைப் பார்த்து, 'அந்த இருவரா? நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்' எனப் பதிலளித்தார்" என்றார்.
அந்தக் காதலி குறித்துக் கேட்கப்பட்டபோது,"அவர் தற்போது எனக்கு நல்ல நண்பர்" எனப் புன்னகையுடன் பதிலளித்த ராகுல்,"காதலில் விழ விரும்புவோர் வார்சிட்டி உணவகத்திற்குச் செல்லுங்கள்; ஆனால் சிக்கன் சாஸர் மட்டும் ஆர்டர் செய்யாதீர்கள், மிகவும் மோசமாக இருக்கும்" என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
இந்திரா காந்தி
"இந்திரா காந்தியை 'அம்மா' என அழைக்கத் தயங்கினேன்"
தனது சுயசரிதை வெளியீட்டு விழாவில் பேசிய சோனியா காந்தி, மறைந்த பிரதமர் இந்திரா காந்திக்கும் தனக்குமான மாமியார் - மருமகள் உறவு குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
"இந்திரா காந்தியை நான் 'அம்மா' அல்லது 'மம்மி' என்று அழைக்க வேண்டியிருந்தது. ஆனால், அவரை அப்படி அழைக்க எனக்குத் துளியளவும் விருப்பமில்லை. என்னைப் பொறுத்தவரை அம்மா என்றால் அது இத்தாலியில் உள்ள எனது தாய் ஒருவர் மட்டுமே ஆவார்." என்றார்.
"அவரை அம்மா என்று அழைக்காமல் வேறு எப்படி அழைக்கலாம் எனச் சிந்தித்துக் கொண்டிருந்தேன். பின்னர், அவருடன் பழகப் பழக அவரை அம்மா என்று அழைக்கும் சூழல் உருவானது. ஆனாலும், அதற்கு எனக்கு சிறிது காலம் தேவைப்பட்டது" என சோனியா காந்தி தெரிவித்தார்.