இம்பால்: UFOக்கள் பற்றிய விவரம் அறிய புறப்பட்ட 2 ரஃபேல் ஜெட் விமானங்கள்
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) இம்பால் விமான நிலையம் அருகே அடையாளம் தெரியாத பறக்கும் பொருளைக் கண்டது பற்றிய தகவலைப் பெற்ற இந்திய விமானப்படை (IAF), அவற்றை தேடுவதற்காக அதன் ரஃபேல் போர் விமானத்தை களமிறக்கியுள்ளது. நேற்று மதியம் 2:30 மணியளவில் இம்பால் விமான நிலையத்தில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் தென்பட்டதை அடுத்து சில வணிக விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. "இம்பால் விமான நிலையத்திற்கு அருகே யுஎஃப்ஒ பற்றிய தகவல் கிடைத்ததும், அருகிலுள்ள விமான தளத்தில் இருந்து ரஃபேல் போர் விமானம் சென்று யுஎஃப்ஒவை தேடுவதற்காக அனுப்பப்பட்டது" என்று பாதுகாப்பு வட்டாரங்கள் ANIயிடம் தெரிவித்தன.
UFO-ஐ கண்டுபிடிக்க முடியவில்லை!
"மேம்பட்ட சென்சார்கள் பொருத்தப்பட்ட ரஃபேல் விமானங்கள், UFO ஐத் தேடுவதற்காக சந்தேகத்திற்குரிய பகுதியில், குறைந்த மட்டத்தில் பறந்து தேடியது. ஆனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை," என்று அதிகாரிகள் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, முதல் விமானம் திரும்பிய பிறகு, மேலும் ஒரு ரஃபேல் போர் விமானம் அனுப்பப்பட்டது. அதனாலும் UFO-ஐ கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. எனினும், "இம்பால் விமான நிலையத்தில் யுஎஃப்ஒவின் வீடியோக்கள் இருப்பதால், சம்பந்தப்பட்ட ஏஜென்சிகள் யுஎஃப்ஒவின் விவரங்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரஃபேல் போர் விமானங்கள் சமீபத்தில் சீன எல்லையில் பூர்வி ஆகாஷ் என்ற மெகா விமானப் படைப் பயிற்சியில் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன நடந்தது?
மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் உள்ள பிர் திகேந்திரஜித் சர்வதேச விமான நிலையத்தில், நேற்று பிற்பகல் 2.30 மணியளவில், இம்பால் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கு (ATC) மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) கட்டுப்பாட்டு அறையிலிருந்து ATC கோபுரத்திற்கு சற்று மேலே அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்று காணப்படுவதாக அழைப்பு வந்தது. விமான நிலையத்தின், ஏடிசி கோபுரத்தின் மொட்டை மாடியில் இருந்து பொருள் தென்பட்டது. அதோடு, விமான நிறுவன ஊழியர்கள் மற்றும் சிஐஎஸ்எஃப் பணியாளர்கள் உட்பட தரையில் இருந்தவர்களும் இதைப் பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.
என்ன நடந்தது?
மேலும் அந்த பறக்கும் பொருளின் நிறம் வெண்மையாக இருந்தது என கூறப்பட்டது. அது டெர்மினல் கட்டிடத்தின் மேல் பறந்து, ஏடிசி கோபுரத்திற்கு மேலே தெற்கு நோக்கி நகர்ந்து சிறிது நேரம் அங்கேயே நின்றது எனவும், பின்னர் அது ஓடுபாதையின் தென்மேற்கு நோக்கி நகர்ந்து, மாலை 4.05 மணி வரை அது காணாமல் போனது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், கொல்கத்தாவில் இருந்து இம்பாலுக்கு 173 பயணிகளுடன் பறந்த இண்டிகோ A320 விமானம், டெல்லியில் இருந்து இம்பாலுக்கு 183 பயணிகளுடன் பறந்த மற்றொரு இண்டிகோ ஏ320 விமானம் மாலை 4.05 மணிக்கு கொல்கத்தாவுக்கு திருப்பி விடப்பட்டது.இதோடு, மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து விமான நிலைய செயல்பாடுகளும் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.