
பிரதமரை நேரில் சந்தித்த PTR பழனிவேல் தியாகராஜன்; காரணம் என்ன?
செய்தி முன்னோட்டம்
கடந்த முறை பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்த போது, மதுரையில் அவரை நேரில் சந்தித்தது எதற்காக என்பதை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் PTR பத்திரிகையாளர்களிடம் இன்று தெரிவித்தார்.
"அரசாங்கத்தை சிறப்பாக நடத்துவது என்பது சாதாரண பணி கிடையாது. அதையெல்லாம் கடந்துதான் நாங்களும், முதல்வரும் பணி செய்து வருகிறோம்".
"இன்றுகூட ஒரு நாளிதழில் எனக்கும், பிரதமருக்கும் தனிப்பட்ட உறவு இருப்பது போல் செய்தி வந்துள்ளது. முதல்வர் கொடுத்த பணியைத் தான் நான் செய்தேன். அதனால் தான் மதுரைக்குச் சென்று பிரதமரை வரவேற்று வழி அனுப்பி வைத்தேன், அதில் எந்த அரசியலும் கிடையாது, அரசாங்கத்தின் பணியை நான் செய்தேன்" என அவர் தெரிவித்துள்ளார்.
மோடியின் தமிழ்நாடு விசிட்
"தேர்தல் நேரத்தில் மட்டுமே தமிழகம் வருகிறார் மோடி"
தொடர்ந்து பேசிய PTR, "அரசியல் செய்வதற்காக மட்டுமே பிரதமர் தமிழகத்துக்கு வருகிறாரே தவிர, தேர்தல் நெருங்கும் நேரத்தில் பலமுறை தமிழகத்துக்கு வருகிறாரே தவிர, உண்மையான மக்கள் நலன் அக்கறை இருந்தால் புயல் வந்த பொழுது சென்னை அல்லது தூத்துக்குடிக்கோ வந்து மக்களை சந்திக்கவில்லை. புயலின் பாதிப்பை நேரில் கண்காணிக்கவில்லை" என கூறினார்.
அதோடு,"ஜனநாயகத்தின் முக்கிய பொறுப்பில் பிரதமர் இருக்கிறார், அதனால் அவரை வரவேற்கவும், உதவி செய்வதற்காகவும் வழி அனுப்புவது பொறுப்பு வகிக்கும் அரசாங்கத்தின் வேலை. அதனடிப்படையில் முதல்வர் அலுவலகத்தில் இருந்து இந்தப் பணியை செய்ய எனக்கு கட்டளை வந்தது. அதை நான் நிறைவேற்றினேன். அது அரசாங்கத்தின் பணி. தனிநபரின் விருப்பமோ, அரசியலோ கிடையாது" என்றார்.