Loading...
பயங்கரவாதத்திற்கு எதிராக 'ஜீரோ டாலரன்ஸ்' கொள்கை: பிரதமர் மோடி மன்கி பாத் உரை
'மன் கீ பாத்' 138-வது அத்தியாயத்தில் நாட்டுமக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி

பயங்கரவாதத்திற்கு எதிராக 'ஜீரோ டாலரன்ஸ்' கொள்கை: பிரதமர் மோடி மன்கி பாத் உரை

எழுதியவர் Venkatalakshmi V
Sep 27, 2026
01:47 pm

செய்தி முன்னோட்டம்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா 'பூஜ்ய சகிப்புத்தன்மை' கொள்கையை கடுமையாகப் பின்பற்றி வருவதாகவும், அதற்கு 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சர்ஜிகல் ஸ்டிரைக்கே மிகச்சிறந்த உதாரணம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனது மாதந்திர வானொலி நிகழ்ச்சியான 'மன் கீ பாத்' 138-வது அத்தியாயத்தில் நாட்டுமக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து பல்வேறு முக்கிய கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.

சாதனை

"பயங்கரவாதத்திற்குத் தகுந்த பதிலடி": வரலாற்றுச் சாதனையை நினைவுகூர்ந்த பிரதமர்

2016 செப்டம்பர் 28-29 தேதிகளில் இந்திய ராணுவம் எல்லைத் தாண்டிச் சென்று பயங்கரவாத முகாம்களை அழித்து நடத்திய 'சர்ஜிகல் ஸ்டிரைக்' நடவடிக்கை 10 ஆண்டுகளை எட்டவுள்ளதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், "10 ஆண்டுகளுக்கு முன்பு நமது எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை (LoC) தாண்டி சென்று பயங்கரவாத முகாம்கள் மீது நமது வீரர்கள் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக், இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு அணுமுறையை உலகிற்குப் புதிய கோணத்தில் வெளிப்படுத்தியது" என்றார்.

இப்பதிலடிக்கு பிறகு இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராகப் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் கையாண்டு வருவதாகவும், பாலக்கோட் வான்வழித் தாக்குதல் முதல் 'ஆபரேஷன் சிந்தூர்' வரை இந்தியா தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு பலமான பதிலடிகளைக் கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

குண்டுவெடிப்பு

கடந்த காலத் தொடர் குண்டுவெடிப்புகளும், அணுகுமுறை மாற்றமும்

2008 டெல்லி தொடர் குண்டுவெடிப்பு மற்றும் 26/11 மும்பைத் தாக்குதல்களை நினைவுகூர்ந்த அவர், "ஒரு காலத்தில் இந்தியாவில் தொடர் குண்டுவெடிப்புகள் வழக்கமான ஒன்றாக மாறியிருந்தன. அப்போதெல்லாம் தாக்குதல்கள் நடந்த பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தாலும், அதை யாரும் பெரிதாக பொருட்படுத்தாமல் காலம் கடப்பதே வாடிக்கையாக இருந்தது. ஆனால், இன்றைய இந்தியா பயங்கரவாதத்தை எந்த வடிவத்திலும் பொறுத்துக்கொள்ளாது" என உறுதியளித்தார்.

மேலும், அமெரிக்காவில் நடந்த 9/11 பயங்கரவாதத் தாக்குதலின் 25-வது ஆண்டைக் குறிப்பிட்ட அவர், பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட இந்திய குடும்பங்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆதரவையும் தெரிவித்துக் கொண்டார்.

ADVERTISEMENT