பிரான்சில் கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் விமானம் இன்று மும்பை வந்து சேர்ந்தது
கடந்த 21ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் பகுதியிலிருந்து மத்திய அமெரிக்காவின் நிகரகுவா பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானம் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் அருகேயுள்ள வத்ரி விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்ப வேண்டும் என்னும் காரணத்தினால் தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த விமானத்தில் 303 இந்தியர்கள் இருந்த நிலையில் பெரும்பாலானோர் அதில் தமிழ் மற்றும் ஹிந்தி பேசக்கூடியவர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில், வத்ரி விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் அந்த விமானத்தில் ஆள் கடத்தல் செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில், பிரான்ஸ் அதிகாரிகள் பயணிகளை தரையிறக்கி அவர்களது ஆவணங்களை சரிபார்த்துள்ளனர்.
சந்தேகப்படும் வகையில் இருந்த 2 பேரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை
அதில் 11 சிறுவர்கள் பெற்றோர்-உறவினர் துணையின்றி தனியாக பயணம் மேற்கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் 5 சிறுவர்கள் உள்பட 20 பேர் பிரான்ஸ் நாட்டில் புகலிடம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. சந்தேகப்படும் வகையில் இருந்த 2 பேரை கைது செய்து அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்த தகவல் இந்திய தூதரகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. இந்திய தூதரக அதிகாரிகளும் அங்கு விரைந்து பிரான்ஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். விமான பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விமான நிலையத்தில் இருந்த அறைகளில் தங்க வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இன்று அதிகாலை 4 மணியளவில் மும்பை வந்தடைந்த விமானம்
இதனை தொடர்ந்து விமான பயணிகள் அனைவரும் பிரான்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது. பின்னர் விமானம் அங்கிருந்து புறப்பட நீதிபதிகள் அனுமதி வழங்கிய நிலையில், அந்த விமானம் இன்று அதிகாலை 4 மணியளவில் 276 பயணிகளுடன் மும்பை விமான நிலையம் வந்தடைந்தது. இதற்கிடையே புகலிடம் கேட்ட 25 பேர் அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.