
லெஃப்ட்-ல இண்டிகேட்டர், ரைட் திருப்பு! போர்கால ஒத்திகை என ஏமாற்றி பாகிஸ்தான் மீது இந்தியாவின் அதிரடி தாக்குதல் -Op Sindoor
செய்தி முன்னோட்டம்
பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததற்குப் பிறகு, பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில் இந்திய ராணுவம் நடத்திய "ஆபரேஷன் சிந்தூர்" தாக்குதல், பாகிஸ்தானை திடுக்கிட செய்துள்ளது.
"போர்கால ஒத்திகை" என வெளியிடப்பட்ட அறிவிப்பால் பாகிஸ்தான் ஏமாற, இந்தியா மே 7 நள்ளிரவில் விமானப்படையின் மூலம் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதலை துவங்கியது.
இந்திய அரசால் நாடு முழுவதும் "போர் ஒத்திகை" என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் இதனை ஒரு பொதுவான ராணுவ இயக்கமாகவே எண்ணியது.
இதை சாமர்த்தியமாக பயன்படுத்தி, இந்திய விமானப்படை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்கியது.
அதிரடி தாக்குதல்
அதிரடி தாக்குதல் - 9 பயங்கரவாத முகாம்கள் அழிப்பு
ஆபரேஷன் சிந்தூரில் ஜெய்ஷ் இ முகமது மற்றும் லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் முக்கிய முகாம்கள் அழிக்கப்பட்டன.
இந்தியா பாகிஸ்தானை நேரடியாக தாக்காமல், பயங்கரவாதத் தளங்களையே குறிவைத்திருப்பதாகவும், இது நீதியின் அடிப்படையில் செய்யப்பட்ட நடவடிக்கையாகும் என ராணுவம் X பக்கத்தில் தெரிவித்தது.
"நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது; ஜெய்ஹிந்த்," என்ற பதிவும் இடப்பட்டுள்ளது.
அவசரநிலை பிரகடனம்
பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனம்
இந்திய தாக்குதல்களை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து லாகூர், சியல்கோட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விமான நிலையங்கள் 48 மணி நேரத்துக்கு மூடப்பட்டன.
பஞ்சாப் மாகாணம் முழுவதும் அவசரநிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் இரவு 3:45 மணிக்கு பதிலடி தாக்குதல்களைத் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருந்தாலும், இந்தியா தனது நடவடிக்கைகள் பயங்கரவாத இலக்குகளை மட்டுமே நோக்கி இருந்ததாக உறுதிபட தெரிவித்துள்ளது.
வரலாறு
பாலகோட் தாக்குதலுக்கும், ஆபரேஷன் சிந்தூருக்கும் இடையே ஒற்றுமை
2019ஆம் ஆண்டு பாலகோட் தாக்குதலிற்கும், ஆபரேஷன் சிந்தூருக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளது.
இரண்டின் போதும், உலக நாடுகள் அசந்திருக்கும் நேரத்தில் இந்தியா, பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி நிலைகுலைய செய்தது.
2019 பிப்ரவரி 26 அன்று விடியற்காலையில் இந்தியா பாலகோட்டைத் தாக்கியது.
ஆனால், நடவடிக்கைக்கு முந்தைய நாள், பிப்ரவரி 25 அன்று, பிரதமர் மோடி, புது தில்லியில் தேசிய போர் நினைவுச்சின்னத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்தியாவின் ஆயுதப் படைகளின் வீரம் பற்றி அவர் பேசிய போதிலும், பாகிஸ்தான் மீது வரவிருக்கும் தாக்குதல் பற்றிய எந்த குறிப்பும் அவர் தரவில்லை.
அன்றிரவு 9 மணிக்கு, இந்திய விமானங்கள் புறப்படத் தயாராக இருந்தபோது, அவர் ஒரு ஊடக உச்சி மாநாட்டில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.