நாடு முழுவதும் பட்டாசுகளுக்கு தடை: எந்த வகை பட்டாசுகளுக்கும் அனுமதி இல்லையா?
தீபாவளி நெருங்கி வருவதால், பட்டாசு கடைகளில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் பட்டாசுகள் பயன்படுத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் நேற்று பட்டாசுகளுக்கு தடை விதித்தது. நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, ராஜஸ்தானில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை நேற்று விசாரித்த போது, இந்த தடையை அறிவித்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் எந்த வகையான பட்டாசுகளுக்கு தடை விதித்திருக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.
அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதா?
இல்லை, அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்படவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பேரியம் உப்புகள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் கொண்ட பட்டாசுகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அனைத்து மாநில அரசுகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பசுமை பட்டாசுகளை தவிர மற்ற பட்டாசுகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்தது.
பசுமை பட்டாசுகள் என்றால் என்ன?
சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கமால் தீபாவளியை பட்டாசுகளுடன் கொண்டாடுவதற்கு அறிமுகப்படுத்தப்பட்டது தான் இந்த பசுமை பட்டாசுகள். லித்தியம், ஆர்சனிக் மற்றும் பேரியம் போன்ற ஆபத்தான இரசாயனங்கள் இல்லாத பட்டாசுகள் பசுமை பட்டாசுகள் என்று அழைக்கப்படுகின்றன. இது போன்ற பட்டாசுகளில் அலுமினியம், ஈயம் மற்றும் கார்பன் போன்ற இரசாயனங்கள் இருந்தாலும், அவை வழக்கமான பட்டாசுகளில் இருப்பதை விட குறைந்த அளவிலேயே உள்ளன. பசுமை பட்டாசுகள் வெடிக்கும் போது பொதுவாக நீராவி வெளியாகும். அப்படி வெளியாகும் நீராவி, பட்டாசுகளில் இருந்து வெளியேறும் தூசிகளை காற்றில் கலக்கவிடாமல் அடக்குகிறது. அதனால், காற்று மாசுபாடுவதும் தடுக்கப்படுகிறது.
டெல்லியில் அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடை
2024 ஜனவரி 1-ம் தேதி வரை தேசிய தலைநகர் பகுதியில்(NCR) அனைத்து வகையான பட்டாசுகளையும் பயன்படுத்த கடந்த மாதம் டெல்லி அரசு தடை விதித்தது. பட்டாசுகளை தயாரித்தல், சேமித்தல், விற்பனை செய்தல், ஆன்லைன் டெலிவரி செய்தல், வெடிக்க செய்தல் ஆகியவை டெல்லியில் தடை செய்யப்பட்டுள்ளது. பசுமை பட்டாசுகள் உட்பட அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் இந்த தடை பொருந்தும். "கடுமையான" காற்று மாசுபாடு டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியை(NCR) சூழ்ந்துள்ளதால், பட்டாசுகளுக்கு உரிமம் வழங்க வேண்டாம் என்று காவல்துறைக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
பிற மாநிலங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள்
பஞ்சாப், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தீபாவளியன்று இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரவு 7:00 மணி முதல் 10:00 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்ய ஒரு சிறப்புப் படையை கர்நாடகாவின் காங்கிரஸ் தலைமையிலான அரசு உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பீகாரில் அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடை
மற்ற மாநிலங்களைப் போலல்லாமல், பீகார் அரசு பட்டாசுகளுக்கு முழு தடை விதித்துள்ளது. காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், பாட்னா, கயா, முசாபர்பூர் மற்றும் ஹாஜிபூர் ஆகிய நான்கு நகரங்களிலும்(பச்சை பட்டாசுகள் உட்பட) பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் நிர்வாகம் முழு தடை விதித்துள்ளது. பீகார் மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் காற்று மாசு
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதி(NCR) மோசமான காற்று மாசுபாட்டுடன் போராடி வருகிறது. டெல்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு(AQI) இன்று காலை 418 ஆக பதிவாகியுள்ளது. நொய்டா, குருகிராம் மற்றும் சுற்றியுள்ள பிற நகரங்களின் நிலைமையும் மிகவும் மோசமாகியுள்ளது. கடந்த வாரம் உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் ஒன்றாக அறிமுகமான மும்பையிலும் காற்று மாசுபாடு மோசமடைந்துள்ளது. மும்பையில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு(AQI) இன்று காலை 165ஆக இருந்தது.