LOADING...
'ஆபரேஷன் சிந்தூரை' நிறுத்த எந்த உலக தலைவரும் எங்களை கோரவில்லை: ராகுல் காந்திக்கு பதிலளித்த பிரதமர்
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு பதிலளித்த பிரதமர் மோடி

'ஆபரேஷன் சிந்தூரை' நிறுத்த எந்த உலக தலைவரும் எங்களை கோரவில்லை: ராகுல் காந்திக்கு பதிலளித்த பிரதமர்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 29, 2025
07:49 pm

செய்தி முன்னோட்டம்

உலகில் எந்தத் தலைவரும் இந்தியாவிடம் ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தக் கோரவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறியதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பகிரங்கமாக மறுக்க முடியுமா என சவால் விட்டதை தொடர்ந்து பிரதமரின் கருத்துக்கள் வந்தன. இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் மற்றும் இந்த நடவடிக்கையை அரசாங்கம் கையாண்ட விதம் குறித்து கூர்மையான கேள்விகளை எழுப்பி, மத்திய அரசின் மீது கடுமையான தாக்குதலுடன் ராகுல் காந்தி தனது நாடாளுமன்ற உரையை இன்று தொடங்கினார்.

இந்திரா காந்தி

"இந்திரா காந்தியின் தைரியத்தில் பாதிகூட பிரதமருக்கு இல்லை"

"டொனால்ட் டிரம்ப் போரை நிறுத்தியதாக 29 முறை கூறினார். இந்திரா காந்தியின் தைரியத்தில் 50 சதவீதமாவது பிரதமரிடம் இருந்தால், அவர் நாடாளுமன்றத்தில் எழுந்து நின்று 'டொனால்ட் டிரம்ப் பொய் சொல்கிறார், அவர் ஒருபோதும் எந்த போர் நிறுத்தத்திற்கும் மத்தியஸ்தம் செய்யவில்லை' என்று கூற வேண்டும்," என்று ராகுல் காந்தி கூறினார். "அவருக்கு தைரியம் இருந்தால், டொனால்ட் டிரம்ப் ஒரு பொய்யர் என்று இங்கே கூறட்டும்," என்று அவர் கிண்டலாக சவால் விட்டார். "பிரதமர் ஏன் அமைதியாக இருக்கிறார்? டிரம்ப் பொய் சொல்கிறார் என்றால், அதைச் சொல்லுங்கள். அதை நாடாளுமன்றத்தில் சொல்லுங்கள்."

பதில்

பிரதமர் மோடியின் பதில்

ராகுல் காந்தி சவால் விடுத்த சிறிது நேரத்திலேயே அவையில் பேசிய பிரதமர் மோடி, உலகில் எந்தத் தலைவரும் இந்தியாவை ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தச் சொல்லவில்லை என்றார். "உலகில் எந்தத் தலைவரும் ஆபரேஷன் சிந்தூரைத் நிறுத்தச் சொல்லவில்லை" என்று பிரதமர் கூறினார். "மே 9 ஆம் தேதி இரவு, அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் என்னுடன் பேச முயன்றார். அவர் ஒரு மணி நேரம் முயற்சித்தார், ஆனால் நான் படைகளுடனான சந்திப்பில் மும்முரமாக இருந்தேன். நான் அவரைத் திரும்ப அழைத்தபோது, பாகிஸ்தான் ஒரு பெரிய தாக்குதலைத் திட்டமிடுவதாக அவர் என்னிடம் கூறினார். இது பாகிஸ்தானின் நோக்கம் என்றால், அது பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதே எனது பதிலாக இருந்தது." என்றார்.

ஆதரவு

உலக நாடுகளின் ஆதரவு

"பஹல்காம் மற்றும் ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்தியா பெற்ற வெளியுறவுக் கொள்கை மற்றும் உலகளாவிய ஆதரவு குறித்து நிறைய விவாதங்கள் நடந்துள்ளன... ஆனால் உண்மை என்னவென்றால், உலகில் எந்த நாடும் இந்தியா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள செயல்படுவதைத் தடுக்கவில்லை. உண்மையில், 193 நாடுகளில் மூன்று நாடுகள் மட்டுமே பாகிஸ்தானை ஆதரித்தன." என்றார். அதோடு, ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்தியாவுக்கு காங்கிரஸிடமிருந்து தவிர உலகளாவிய ஆதரவு கிடைத்தது என்று கூறினார். "உலகின் ஆதரவு எங்களுக்கு இருந்தது, ஆனால், துரதிர்ஷ்டவசமாக, காங்கிரஸிடமிருந்து இல்லை," என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதோடு,"ஆயுதப் படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. எப்போது, எங்கே, எப்படி என்பதை அவர்களே முடிவு செய்ய சுதந்திரம் வழங்கப்பட்டது" என்றார்.