மக்களவையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதை எதிர்த்து, மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கிய விவகாரத்தில், டிஸ்மிஸ் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். மஹுவா மொய்த்ரா, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் இருந்து பரிசுகள் மற்றும் சட்டவிரோதமாக பணம் பெற்ற குற்றச்சாட்டை விசாரித்த நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு, அவரை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைத்து அறிக்கையை வழங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று, இந்த அறிக்கையை நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். டிஸ்மிஸ் செய்யப்பட்டதற்கு பின், மொய்த்ரா "ஆதாரம் இல்லாமல் செயல்பட்டதற்காக" நெறிமுறைக் குழு மீது குற்றம்சாட்டினார். மேலும் அவர், நெறிமுறைகள் குழுவின் குற்றச்சாட்டுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் தனக்கு பேச வாய்ப்பு அளிக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டுகள் என்ன?
நாடாளுமன்றத்தில் எம்பி மஹுவா மொய்த்ரா, கேட்ட 50 கேள்விகள் பிரதமர் மோடி மற்றும் அதானிக்கு எதிராக, ஹிராநந்தனி குழுமத்திடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாக கேட்டதாக, மஹுவாவின் முன்னாள் காதலர் எனக் கூறப்படும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் அனந்த் தேஹாத்ரி மற்றும் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே ஆகியோர் மக்களவை சபாநாயகர் இடம் மனு வழங்கியிருந்தனர். இந்த புகாரை சபாநாயகர் நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரிக்க பரிந்துரை செய்தார். இதற்கிடையே தர்ஷன், மஹுவாவிற்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கியதாகவும், தன்னிடம் நாடாளுமன்ற லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பகிர்ந்து கொண்டதாகவும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். இதை விசாரித்த நெறிமுறைகள் குழு, மஹுவாவை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைத்திருந்தது.