மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நிறைவடைந்தது பிரச்சாரம், நாளை வாக்குப்பதிவு
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) ஆதரவுடன் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த இடைத்தேர்தலில் தனித்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதால் இரு தொகுதிகளிலும் 5 முனைப் போட்டி நிலவுகிறது. மதுராந்தகம் தொகுதியில் சுயேச்சைகள் உட்பட மொத்தம் 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தேர்தல் விதிமுறை
தொகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட வெளியூர்க்காரர்கள்
தேர்தல் விதிமுறைகளின்படி நேற்று மாலை 6 மணி முதல் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அல்லாத வெளியூரைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் இரு தொகுதிகளையும் விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
திருமண மண்டபங்கள், லாட்ஜ்கள் உள்ளிட்ட தங்குமிடங்களில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதை முன்னிட்டு, இன்று காலையிலிருந்தே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்குப்பதிவு பொருட்கள் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் துப்பாக்கி ஏந்திய பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க இரு தொகுதிகளிலும் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.