Loading...
ஆண்கள் 'ஹவுஸ் ஹஸ்பண்ட்' ஆக மாறுவது சமூகத்தில் இயல்பாக வேண்டும்: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
"ஆண்கள் 'ஹவுஸ் ஹஸ்பண்ட்' ஆக மாற முன்வருவது சமூகத்தில் இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்"

ஆண்கள் 'ஹவுஸ் ஹஸ்பண்ட்' ஆக மாறுவது சமூகத்தில் இயல்பாக வேண்டும்: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

எழுதியவர் Venkatalakshmi V
Sep 25, 2026
08:47 am

செய்தி முன்னோட்டம்

பெண்கள் தங்களது தொழில் வாழ்க்கைக்கு அதிக முன்னுரிமை அளித்து வரும் நிலையில், திருமணத்தை தங்களது வளர்ச்சிக்கு தடையாக கருதாமல் இருக்க, ஆண்கள் 'ஹவுஸ் ஹஸ்பண்ட்' ஆக மாற முன்வருவது சமூகத்தில் இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. மருத்துவர் தம்பதி ஒருவரின் பரஸ்பர விவாகரத்து வழக்கை விசாரித்த அமர்வு, குறிப்பாக ஐடி மற்றும் பிற சேவைத் துறைகளில் பணிபுரியும் தொழில்முறை பெண்கள், திருமணத்தை இரு தரப்பிற்கும் பயனளிக்கும் ஒன்றாகக் கருதுவதில்லை என்று சுட்டிக்காட்டியது. தொழில்முறை வளர்ச்சியை விரும்பும் பெண்கள், திருமணம் தங்களது முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்தும் எனக் கருதித் திருமணத்தை தவிர்க்கத் தொடங்குவதால், திருமண ஆகாத பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நீதிமன்றம் அவதானித்துள்ளது.

ஹவுஸ் மேக்கர்

'ஹவுஸ் மேக்கர்' பாலினப் பாகுபாடற்ற சொல்

பாரம்பரியமாக பெண்கள் இல்லத்தரசிகளாக இருப்பதை போல, ஆண்கள் வீட்டின் பராமரிப்பு மற்றும் குடும்பப் பொறுப்புகளை ஏற்கும் 'ஹவுஸ் ஹஸ்பண்ட்' நிலையும் புதிய இயல்பாக மாற வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

'ஹவுஸ்மேக்கர்' என்ற சொல் பாலினப் பாகுபாடற்றது என்றும், இத்தகைய சிந்தனை மாற்றமே இந்தியக் குடும்ப அமைப்பைப் பாதுகாக்கவும், விவாகரத்துகளைக் குறைக்கவும் உதவும் என்றும் தெரிவித்தனர்.

மேற்கத்திய நாடுகளை போல தனிநபரை மையமாகக் கொள்ளாமல், குடும்பத்தையே அடித்தளமாகக் கொண்ட பாரம்பரியக் கலாச்சாரத்தைக் கொண்டது இந்தியச் சமூகம்.

கடந்த அரை நூற்றாண்டாக பெண்களின் பணிசார்ந்த பங்களிப்பு அதிகரித்து வரும் நிலையில், குடும்பப் பொறுப்புகளை ஆண்-பெண் இருவரும் சமமாகப் பகிர்வதே தற்போதைய தேவை என அமர்வு வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT