ஆணாதிக்கத்திற்கு எதிராக போராடி சாதனை படைத்த 5 தமிழ் பெண்கள்
செய்தி முன்னோட்டம்
ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
சமூக முன்னேற்றம், பொருளாதாரம் என பல துறைகளில் அவர்கள் செய்த சாதனைகளை பாராட்டும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
நீண்ட காலம் அடிமை விலங்கு பூட்டப்பட்ட பெண்கள், இந்த நூற்றாண்டின் ஆரம்பம் முதல், மெதுவாக தங்கள் கட்டுகளை உடைத்துக் கொண்டு, ஆண்களுக்கு சமமாக அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர்.
அந்த வகையில், இந்த நாளில் ஆண்கள் மட்டுமே முன்னிலை வகித்த பல்வேறு துறைகளில் சாதித்து காட்டிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 முக்கியமான பெண்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
மருத்துவம்
ஆண்கள் மருத்துவ கல்லூரியில் படித்த முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்களில் முக்கியமானவர் முத்துலட்சுமி ரெட்டி.
தொழில் ரீதியாக மருத்துவராக இருந்தாலும், அவர் பல சமூக நல செயல்பாடுகளில், பெண்கள் முன்னேற்றத்தில் ஆர்வமாக ஈடுபட்டார்.
அவ்வாறே, அவர் எழுத்தாளராகவும் புகழ்பெற்றவர்.
முத்துலட்சுமி ரெட்டி, ஆணாதிக்கத்திற்கும் எதிரான போராட்டத்தினால் பெரிதும் அறியப்பட்டார்.
ஆண்கள் கல்லூரியில் அனைவரையும் விஞ்சி தலைசிறந்த மாணவியாக பல பதக்கங்களை வென்றார்.
மேலும், அரசு மகப்பேறு மற்றும் கண் மருத்துவமனையில் முதல் பெண் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தார்.
அதற்கு அடுத்து, புற்று நோயாளிகளுக்கான நிதி திரட்டி லாப நோக்கற்ற புற்றுநோய் சிகிச்சை நிலையம் ஒன்றை சென்னை அடையாறில் தொடங்கினார்.
இன்று, ஆண்டுதோறும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற்று நோயாளிகள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள்.
பத்திரிக்கைத்துறை
முதல் பத்திரிக்கை ஆசிரியராக இருந்த வி எம் கோதைநாயகி அம்மாள்
வை.மு.கோ என பிரபலமாக அறியப்படும் வி.எம்.கோதை நாயகி அம்மாளின் சாதனைகள் தமிழ் பத்திரிகைத் துறையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.
தமிழ் பத்திரிகைத் துறையின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்ற முதல் பெண் அவர் தான். "ஜெகன் மோகினி" என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் அவர் இருந்தார்.
அதோடு கிட்டத்தட்ட 115 புத்தகங்களுக்கு மேல் அவர் எழுதியுள்ளார்.
இலக்கிய பணியில் தீரா காதல் கொண்டிருந்த அவர் காந்திய வழியில் தனது எழுத்து மூலமாக விடுதலைக்காக போராடியுள்ளார். இதற்காக சிறைவாசமும் அனுபவித்துள்ளார்.
அவருடைய எழுதினால் ஈர்க்கப்பட்டு, "ஜெகன் மோகினி" பத்திரிகை, மலேசியா, ரங்கூன் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் வாசிக்கப்படும் முக்கிய பத்திரிகையாக உருவெடுத்தது.
இவரது எழுத்தால் ஈர்க்கப்பட்ட பல பெண்களுக்கும் பத்திரிகைத்துறையில் வாய்ப்புகளை உருவாக்கியவர் இவர்.
சமூக நீதி
தேவதாசி முறையை ஒழிக்க போராடிய சமூக சீர்திருத்தவாதி மூவலூர் ராமாமிர்தம்
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால், இந்தியாவில் தேவதாசி முறையை ஒழிக்க போராடிய முக்கியமான பெண்களில் அவரும் ஒருவர்.
சமூக நல ஆர்வலராக, எழுத்தாளராக, மற்றும் திராவிட இயக்கத்தின் அரசியலில் ஈடுபாடு கொண்டவராக அறியப்படுபவர் ராமாமிர்தம்.
பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தால் கவரப்பட்ட மூவலூர் ராமாமிர்தம், தாசிகளின் மோசமான வாழ்க்கையை விவரிக்கும் "மதி பெற்ற மைனர்" என்ற நாவலை எழுதியுள்ளார்.
அவரது தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் எழுத்துக்கள் மூலமே, தேவதாசி முறையை ஒழிக்க இயற்றப்பட்ட "மெட்ராஸ் தேவதாசி சட்டம்" உருவாக்கப்பட்டது என வரலாறு கூறுகிறது.
நிர்வாகம்
பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நிர்வகிக்கும் இந்திரா நூயி
இந்திரா நூயி, பெப்சிகோ நிறுவனத்தின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் 2019 வரை பணியாற்றியவர்.
இந்திய அமெரிக்க தம்பதிக்கு பிறந்த இந்திரா நூயி சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.
தன்னுடைய எம்பிஏ பட்டத்தை யேல் பல்கலைக்கழகத்தில் பெற்ற பிறகு, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திலும், பியர்ட்செல் லிமிடெட், மோட்டோரோலா மற்றும் ஏசியா பிரவுன் பொவேரி போன்ற பல முன்னணி நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார்.
1994-இல் பெப்சிகோ நிறுவனத்தில் சேர்ந்து, தன்னுடைய ஓய்வு காலம் வரை அவர் அந்த நிறுவனத்தில் நீண்டகாலம் பணியாற்றினார்.
2017ஆம் ஆண்டு, போர்ப்ஸ் பத்திரிகையின் உலகளாவிய அதிக சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தார்.
தற்போது அவர் அமேசான் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.
தகவல் தொழில்நுட்பம்
HCL டெக்னாலஜிஸ் தலைவர் ரோஷினி நாடார்
HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவரான ரோஷினி நாடார் மல்கோத்ரா, இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை வழிநடத்தும் முக்கியமான பெண்மணிகளில் ஒருவராக மாறியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தினரான சிவ நாடாரின் மகளான ரோஷினி, தனது தந்தையின் வழியில் நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார்.
போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலில், ரோஷினி நாடார் மல்கோத்ராவிற்கு 55வது இடம் கிடைத்துள்ளது.
இது அவரது சாதனைகளை துல்லியமாகப் பிரதிபலிக்கும் மற்றும் தொழிலில் ஆற்றலான பெண் முன்னிலை வகிப்பதை சுட்டிக்காட்டுகிறது.