26/11 தீவிரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை
மும்பை மீதான 2008 தாக்குதல் உட்பட பல பயங்கரவாத தாக்குதல்களுக்காக இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியான லஷ்கர்-இ-தொய்பா(LeT) நிறுவனர் ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம், இந்தியா கேட்டுக்கொண்டதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த குற்றச்சாட்டில் பாகிஸ்தான் அதிகாரிகளால், 2019 ஆம் ஆண்டு காவலில் வைக்கப்பட்டுள்ள சயீத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற இந்திய கோரிக்கையை முதலில் ஜியோ நியூஸ் சேனல் புதன்கிழமை தெரிவித்தது. சயீத், 2020 ஆம் ஆண்டு முதல் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாக குறைந்தது ஐந்து வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். 166 பேர் கொல்லப்பட்ட மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட சயீத்தை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம், இந்தியா பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் அவரது தற்போதைய இருப்பிடம் தெரியவில்லை.
சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சயீத்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்கில் சயீதுக்கு பதினைந்தரை ஆண்டுகள் முதல் 31 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) மற்றும் மேற்கத்திய சக்திகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து இந்த வழக்குகளில் சயீத் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். 2012ல், சயீத் உயிருக்கு, அமெரிக்கா 10 மில்லியன் டாலர் விலை நிர்ணயித்தது. LeT மற்றும் ஜமாத்-உத்-தவா (JuD), உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள், அமெரிக்கா மற்றும் ஐநாவால் தடை செய்யப்பட்டுள்ளது. உலக சமூகத்தின் இந்த நடவடிக்கைகள் இருந்தபோதிலும், சயீத் தொடர்ந்து பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்பட்டு வந்தார். மேலும் LeT இன் மற்றொரு முன்னணி அமைப்பான மில்லி முஸ்லிம் லீக்கின் வேட்பாளர்கள் 2018 இல் தேர்தலில் போட்டியிட முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.