
தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி, கோவை - சின்னக்கல்லார் பகுதியில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழையும், சோலையார், வால்பாறை பகுதியில் 7 செ.மீ. மழையும், நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
எச்சரிக்கை
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
நேற்று, ஜூலை 24ஆம் தேதி, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழமாகி மேற்கு, வடமேற்கு நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, அரபிக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் இடி, மின்னல், மணிக்கு 50 கிமீ வேக காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என IMD அறிக்கை தெரிவிக்கிறது.