LOADING...
இன்று 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இன்று 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 09, 2025
08:49 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டத்தின் ஆற்காடு மற்றும் காவேரிப்பாக்கம் பகுதிகளில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்து, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா, வேலூர் மாவட்டம் அம்முண்டி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, ராணிப்பேட்டை பாலாறு அணைக்கட்டு மற்றும் திருவண்ணாமலை வெம்பாக்கம் பகுதிகளில் தலா 6 செ.மீ. மழை பதிவானது. இன்று தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் மிதமழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை

வானிலை மையத்தின் அறிக்கை 

வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, தெற்கு கடலோர ஆந்திரம் முதல் வடக்கு இலங்கை வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேசமயம், தமிழகம் மற்றும் தென் மாநிலங்கள் மீது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று மற்றும் நாளை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடிய சூழ்நிலை உள்ளது. இந்த மழை ஆகஸ்ட் 14ஆம் தேதிவரை தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும் இடையிடையாக பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.