Page Loader
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
11 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jul 17, 2025
07:48 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, கோவை, நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (ஜூலை 17) முதல் மூன்று நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். இதனால், ஜூலை 22ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் மிதமான மழை நீடிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

கனமழை

6 நாட்களுக்கு கனமழை, மீனவர்களுக்கு எச்சரிக்கை

கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை, நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளையும் கன மழை தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக இருக்கும் நிலையில், சில இடங்களில் மிதமான அல்லது கன மழை பெய்யலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென் மாவட்ட கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் இன்று மற்றும் நாளை கடும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.