தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்வது எப்படி? சட்ட விதிகள் முழு விவரம்
செய்தி முன்னோட்டம்
இந்திய தேர்தல் ஆணையத்திற்குள் உள் மோதல்கள் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கண்டனத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. ஊடக அறிக்கைகளின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியில் (SIR) ஞானேஷ் குமாரின் செயல்பாடுகளுக்கு எதிராக பிற தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் 14 முறை உத்தியோகபூர்வமாக எதிர்ப்பைப் பதிவு செய்ததை அடுத்து இப்போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து இதில் விரிவாகப் பார்க்கலாம்.
சட்டப் பிரிவு 324(5)
அரசியலமைப்பு சட்டப் பிரிவு 324(5) மற்றும் பதவி நீக்கத்திற்கான நிபந்தனைகள்
இந்திய அரசியல் சாசனத்தின் 324(5) பிரிவின்படி, உச்ச நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் அதே கடுமையான நடைமுறைகளின் மூலமே தலைமைத் தேர்தல் ஆணையரையும் பதவியில் இருந்து நீக்க முடியும்.
நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை அல்லது பணியாற்ற இயலாமை ஆகிய இரண்டு காரணங்களுக்காக மட்டுமே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
அரசியல் அழுத்தங்களில் இருந்து தேர்தல் ஆணையத்திற்கு முழு சுதந்திரம் அளிப்பதற்காகவே இத்தகைய கடினமான சட்ட நடைமுறைகள் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
கண்டன தீர்மானத்திற்கான விதிகள்
நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டுவருவதற்கும் நிறைவேற்றுவதற்குமான விதிகள்
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான கண்டன தீர்மானத்தை ஏற்க மக்களவையில் குறைந்தபட்சம் 100 எம்பிக்களும், மாநிலங்களவையில் 50 எம்பிக்களும் கையெழுத்திட்டுக் கடிதம் அளிக்க வேண்டும்.
இத்தீர்மானம் ஏற்கப்பட்டால் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும்.
அதன் பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வருகை தந்த உறுப்பினர்களில் 3-ல் 2 பங்கு சிறப்பு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
அதன்பின்னரே குடியரசுத் தலைவர் அவரை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிடுவார்.
நியமன விதிகள்
தேர்தல் ஆணையர்கள் நியமன சட்ட விதிகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல்
2023 ஆம் ஆண்டின் புதிய சட்டத்தின்படி, பிரதமர், கேபினட் அமைச்சர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அடங்கிய குழுவே தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்கிறது.
முன்னதாக இதே ஆண்டின் தொடக்கத்தில் ஞானேஷ் குமாருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட கண்டனத் தீர்மானங்கள் மக்களவை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவைத் தலைவரால் நிராகரிக்கப்பட்டன.
தற்சமயம் மீண்டும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து புதிய சட்ட வரைவோடு கண்டனத் தீர்மானத்தை கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதால், தேர்தல் ஆணையத்தின் எதிர்காலம் குறித்த விவாதம் சூடுபிடித்துள்ளது.