தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்றும்(நவ.,9)அதேப்பகுதியில் நிலவி வருகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனுடன் குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், கிழக்கு திசை காற்று வேகமாறுப்பாடு ஏற்படவுள்ள காரணத்தினால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி தமிழ்நாடு மாநிலத்தில் தென்காசி, நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் கோயம்பத்தூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையில் 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்
அதேபோல் கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, திருவாரூர், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாளையும்(நவ.,10), 11ம்-தேதியும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்ததால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக இன்று பள்ளிகள் மற்றும் சிறப்பு வகுப்புகளுக்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா விடுமுறை அறிவித்து உத்தரவிட்டிருந்தார்