தொடரும் கனமழை காரணமாக சென்னை உள்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
செய்தி முன்னோட்டம்
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழ்நாடு கடற்கரை பகுதிகளில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் அக்டோபர் 26-ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழை தொடரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதலே விடிய விடிய தொடர் கனமழை பெய்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் பாதுகாப்பிற்காக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்டோபர் 21) விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
வானிலை எச்சரிக்கை
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
இன்று தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய தமிழக பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.