தீவிர புயலாக மாறிய ஹமூன்- 9 தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக் கடலில் உருவான ஹமூன் புயல் தற்போது தீவிர புயலாக வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஒன்பது துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, காரைக்கால், புதுச்சேரி, பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் யாரும் வங்கக் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் புயல், வட மேற்குவங்ககடலில் இருந்து, 21 கிலோமீட்டர் வேகத்தில் வட கிழக்கு நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் கரையைக் கடக்கும் ஹமூன்
ஹமூன் புயல் அடுத்த ஆறு மணி நேரங்களில் ஒரு சில மணி நேரங்களுக்கே, அதிதீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பின்னர் அது வலுவிழந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்து, வங்கதேசத்தின் கெபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே நாளை 25 ஆம் தேதி மாலை கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கரையைக் கடக்கும் போது, மணிக்கு சுமார் 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்திற்கு காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புயல் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் பலத்த மழை பொழிவிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.