மகப்பேறு உதவி திட்டத்தில் தாமதத்தை குறைப்பதற்கான நடவடிக்கை: அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டத்தை, மத்திய அரசின் நிதி விடுவிப்பு இத்திட்டத்தின் செயலாக்கத்தை பாதிக்காத வண்ணம் தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளது. இதன் மூலம் 5 தவணைகளாக வழங்கப்பட்டு வந்த மகப்பேறு உதவி திட்ட நிதி, தற்போது 3 தவணைகளாக வழங்கப்படும். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நன்மைத் திட்டம்-பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல், ₹18,000 (₹14,000 ரொக்கம் மற்றும் ₹4,000 மதிப்புள்ள சத்துணவுப் பொருட்கள்) கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் மாநில அரசின் பங்கு ₹15,000 மற்றும் மத்திய அரசின் பங்காக ₹3,000 வழங்கி வந்தது. 2006ல் இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, 1,16,95,973 நபர்கள் ₹10,529.57 கோடி மதிப்பில் பயனடைந்துள்ளனர்.
மகப்பேறு உதவி திட்டத்தில் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை
கடந்த 2018 ஆம் ஆண்டுக்கு பின், திட்டம் 5 தவணைகளாக செயல்படுத்தப்பட்டு வந்தது. முதல் தவணையாக ₹2,000 மூன்றாவது மாத கர்ப்பத்தின் போதும், இரண்டாம் தவணை ₹2,000 நான்காவது மாத கர்ப்பத்தின் போதும், மூன்றாம் கவலையாக பிரசவத்திற்கு பின் ₹4,000, நான்காம் தவணையாக குழந்தைக்கு 3 மாதமாகும் போது ₹4,000, ஐந்தாம் தவணையாக குழந்தைக்கு 9 மாதங்கள் ஆகும் போது ₹2,000, மற்றும் ₹4,000 மதிப்பிலான சத்துணவு பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. மத்திய, மாநில அரசின் இரு திட்டங்கள் இணைக்கப்பட ஏற்பட்ட காலதாமதமே, கடந்த ஒரு வருடமாக மகப்பேறு உதவித் தொகை வழங்கப்படாததற்கு காரணம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது இப் பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மகப்பேறு உதவி திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்
தற்போது 5 தவணைகளுக்கு பதிலாக, 3 தவணைகளாக உதவித்தொகை விடுவிக்கப்படும். அதன்படி, முதல் தவணையாக நான்காவது மாத கர்ப்ப காலத்தின் போது ₹4,000, இரண்டாம் தவணையாக ₹4,000 குழந்தை பிறந்த பின்னும், குழந்தைக்கு 4 மாதங்கள் ஆகும் போது, மூன்றாம் தவணையாக ₹6,000 வழங்கப்படும். மேலும் முதல், இரண்டாம் தவணையுடன் சத்துணவு பொருட்களும் வழங்கப்படும். "முன்னதாக, மத்திய அரசின் பங்கான ₹3,000 கிடைத்த பிறகுதான், மாநில அரசின் ₹15,000 உதவித்தொகையை விடுவிக்க முடியும்." "தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றத்தில், மத்திய அரசு தனது பங்கை விடுவிக்க தாமதித்தாலும், மாநில அரசு தனது பங்கான ₹15,000 - ₹11,000 ரொக்கம், ₹4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பொருட்களை வழங்க முடியும்" என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.