Loading...
நீலகிரி, கொடைக்கானலில் 2 நாட்களுக்கு உறைபனி; நவம்பர் 23 முதல் தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
நீலகிரி, கொடைக்கானலில் 2 நாட்களுக்கு உறைபனிக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

நீலகிரி, கொடைக்கானலில் 2 நாட்களுக்கு உறைபனி; நவம்பர் 23 முதல் தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Nov 21, 2026
06:17 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு உறைபனி ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 0.9 கிலோ மீட்டர் உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

கனமழை

நவம்பர் 23 முதல் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை

வறண்ட வானிலையைத் தொடர்ந்து நவம்பர் 23-ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அன்றைய தினம் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை

சென்னை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மிதமான மழையும் நவம்பர் 27 வரை கனமழை நீடிப்பும்

நவம்பர் 23-ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதேபோல் நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர்ந்து நவம்பர் 27 ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழையும் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

ADVERTISEMENT