இந்திய அரசியலை திருப்பி போட்ட அரசியல் நண்பர்களின் பட்டியல்
நண்பர்கள் தினமான இன்று இந்திய அரசியலை திருப்பி போட்ட சில அரசியல் நண்பர்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம். மோடி-அமித்ஷா இன்று இந்தியாவின் அரசியலில் வெற்றி வாகை சூடி இருக்கும் மிகப்பெரும் வெற்றி கூட்டணி, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் நட்பாகும். பிரதமர் மோடி குஜராத் முதல்வராவதற்கு முன்பிலிருந்தே இவர்கள் இருவரும் நண்பர்களாக தான் இருந்தார்கள் என்று கூறப்படுகிறது. 1990களில் ஒரு தேர்தல் பேரணியின் போதே, "நரேந்திர பாய், இந்தியாவின் பிரதமராகத் தயாராகுங்கள்" என்று அமித்ஷா மோடியை பாராட்டி பேசி இருக்கிறார். நரேந்திர மோடி நாட்டின் பிரதமரான போது, அமித்ஷா குஜராத்தின் முதல்வர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமித்ஷாவை உள்துறை அமைச்சராக்கிய பிரதமர் மோடி, அவரை தன் அருகிலேயே வைத்து கொண்டார்.
அரவிந்த் கெஜ்ரிவால் - மணீஷ் சிசோடியா
அரசியலில் நட்பைத் தக்கவைத்துக்கொள்ளும் விஷயத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றே சொல்லலாம். அன்னா-ஹசாரே முதல் கிரண் பேடி வரை, பிரசாந்த்-பூஷண் முதல் யோகேந்திர-யாதவ் வரை, கெஜ்ரிவாலின் கூட்டணியில் இருந்த பல நம்பகமான உறுப்பினர்கள் பல்வேறு காரணங்களுக்காக அவரைக் கைவிட்டிருக்கின்றன. ஏன் கெஜ்ரிவாலின் நெருங்கிய உதவியாளர் குமார் விஸ்வாஸ் கூட கட்சிக்குள் பிளவுகள் இருப்பதாக அடிக்கடி கூறி இருக்கிறார். ஆனால், கெஜ்ரிவாலின் நல்ல காலங்களிலும் கெட்ட காலங்களிலும் பிரியாமல் அவரோடு துணை நின்றவர் முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆவார். சிசோடியா தற்போது ஊழல் வழக்கில் சிறையில் இருந்தாலும், அவருக்கு தொடர்ந்து தன் ஆதரவை தெரிவித்து வருகிறார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்.
லாலு பிரசாத் யாதவ் - நிதிஷ் குமார்
பீகாரின் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் ஆகியோர் நாட்டின் மிகவும் பிரபலமான நட்புள்ள எதிரிகள் ஆவர். சோசலிச தலைவரான ராம் மனோகர் லோஹியாவின் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்ட லாலு பிரசாத்தும் நிதிஷ் குமாரும் 1970களில் தங்கள் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினர். பீகாரைச் சேர்ந்த இளம் மாணவ தலைவர்களான இவர்கள் இருவரும் இந்திரா காந்தி விதித்த அவசர நிலைக்கு எதிராகப் போராடியபோது ஒன்றாகச் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது, சோசலிச அரசியல் கட்சியான ஜனதா தளத்தின் ஒரு பகுதியாக அவர்கள் இருவரும் இருந்தனர். 1997இல் லாலு-பிரசாத் பிரிந்து தனது சொந்த ராஷ்டிரிய ஜனதா தளத்தை உருவாக்கினார். அதன் பிறகு, அவர்களுக்கு இடையில் போட்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஜெயலலிதா - சசிகலா
இந்திய அரசியலில் மிகவும் சக்திவாய்ந்த பெண் தலைவர்களில் ஒருவரான மறைந்த ஜெ.ஜெயலலிதா, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்(அதிமுக) மிகப்பெரும் தலைவராக இருந்தார். அப்படிப்பட்ட பெரும் தலைவர் ஜெ.ஜெயலலிதா சசிகலாவை 3 தசாப்தங்களாக தனதருகிலேயே வைத்திருந்தார். சசிகலா நடராஜன் ஜெயலலிதாவிற்கு ஒரு நல்ல அரசியல் ஆலோசகராக மட்டுமல்லாமல், நல்ல தோழியாகவும் சகோதரியாகவும் இருந்தார் என்று கூறப்படுகிறது. அதிமுகவின் வீடியோகிராபராக முன்பு இருந்த சசிகலா, பின்னர் அம்மாவின் இரண்டாவது தளபதியாக மாறினார். பல பொது நிகழ்ச்சிகளில் ஜெயலலிதாவுடன் சசிகலாவும் கலந்து கொண்டிருக்கிறார். சசிகலாவின் மருமகன் சுதாகரனை தத்தெடுத்த ஜெயலலிதா, சுதாகரனுக்கு ஆடம்பர திருமணத்தை நடத்தி வைத்தார். ஜெயலலிதா இறப்பதற்கு முன், அவர் 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது, சசிகலாவும் அவருடன்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடல் பிஹாரி வாஜ்பாய் - எல்கே அத்வானி
1950களில் வாஜ்பாய் மற்றும் அத்வானி பாரதிய ஜன சங்கத்தின் உறுப்பினர்களாகத் தங்கள் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினர். இந்த கட்சி தான் பின்பு பாஜக என்று மாறியது. 1970களில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு அமல்படுத்திய அவசரநிலைக்கு எதிராக அவர்கள் இருவரும் கடுமையாக போராடினர். இன்று உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜக உருவெடுத்திருப்பதற்கு முக்கிய காரணமே வாஜ்பாய் மற்றும் அத்வானியின் கடுமையான உழைப்பு தான். 1999-2004க்கு இடையில் வாஜ்பாய் இந்திய பிரதமராக இருந்தபோது, அத்வானி உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் பணியாற்றினார். தங்கள் இருவருக்கும் இடையில் ஒரு சிறப்பான நட்பு இருந்தது என்றும், தாங்கள் இளைஞர்களாக இருந்தபோது இருவரும் ஸ்கூட்டரில் ஊர்சுற்ற சென்றிருக்கிறோம் என்றும் ஒருமுறை அத்வானி தனது வலைப்பதிவில் கூடியிருக்கிறார்.