
பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த சர்வதேச தலைவர்களை சந்திக்கும் ஏழு நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுக்களில் முதலாவது குழு, இன்று புறப்படும்.
பாகிஸ்தானின் பல தசாப்த கால பயங்கரவாத ஊக்குவிப்பு மற்றும் ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை சமாளிப்பதில் இந்தியாவின் புதிய இயல்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டும் ஆவணங்களுடன் இக்குழு புறப்படும்.
வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி செவ்வாயன்று ஏழு பிரதிநிதிகளில் மூன்று பேருக்கு முக்கியப் பேச்சுப் புள்ளிகள் மற்றும் உலகளாவிய தொடர்புத் திட்டங்கள் குறித்து விளக்கினார்.
சஞ்சய் ஜா தலைமையிலான குழு மூன்று, சிவசேனா தலைவர் ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழு நான்கு, திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழு 6 ஆகியவை இந்த மாநாட்டில் கலந்து கொண்டன.
புறப்பாடு
ஷிண்டே தலைமையிலான குழு இன்று புறப்படும்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், லைபீரியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் சியரா லியோன் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் ஷிண்டே தலைமையிலான குழு, புதன்கிழமை புதுதில்லியில் இருந்து புறப்படும் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
"இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்பதை நாங்கள் தெளிவாகக் கூறுவோம், ஆனால் யாராவது எங்களைத் தாக்கினால், நாங்கள் அதற்குப் பதிலடி கொடுப்போம். இந்தியா பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வளர்ப்பதில் மும்முரமாக உள்ளது," என்று ஷிண்டே கூறினார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை உறுதியாக எதிர்கொள்வதற்காக ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா எவ்வாறு புதிய இயல்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதற்காக, 33 நாடுகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகளை இந்தக் குழு சந்திக்கும்.
ஆதாரங்கள்
இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் ஆவணங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான ஆதாரங்கள்
பாகிஸ்தான் ஆதரவுடன் நடத்தப்பட்ட பெரிய பயங்கரவாதத் தாக்குதல்கள், 2008 மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள், டிஎன்ஏ மாதிரிகள் மற்றும் அழைப்புப் பதிவுகளின் தெளிவான ஆதாரங்களை வழங்கிய பிறகும் இஸ்லாமாபாத் எவ்வாறு செயல்பட மறுத்தது என்பது குறித்து இந்தியக் குழுக்கள் பேசுவார்கள்.
மேலும் 9/11 உலக வர்த்தக மையத் தாக்குதல்கள் மற்றும் 2005 லண்டன் குண்டுவெடிப்பு உட்பட அனைத்து முக்கிய சர்வதேச பயங்கரவாதத் தாக்குதல்களும் பாகிஸ்தானுடன் நேரடி அல்லது மறைமுக தொடர்புகளைக் கொண்டிருந்தன என்பதை இக்குழுவினர் சுட்டிக்காட்டுவார்கள்.
எனினும், பஹல்காம் தாக்குதல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் எதிர்வினை ஆகியவற்றின் மீது அதிக கவனம் செலுத்தப்படும்.