Loading...
AI மூலம் எழுதப்பட்ட போலி புத்தகங்கள் முதல் 245 கோடி கட்டட முறைகேடு வரை: தமிழக நூலக துறையில் ஊழல்
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளிப்படையாக விசாரணை கோரியிருப்பது அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

AI மூலம் எழுதப்பட்ட போலி புத்தகங்கள் முதல் 245 கோடி கட்டட முறைகேடு வரை: தமிழக நூலக துறையில் ஊழல்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 12, 2026
01:04 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு நூலகங்களில் அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்கள் பெயரில் கொள்முதல் செய்யப்பட்ட போலிப் புத்தகங்களை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கோவை ஈ.வெ.ரா நூலகக் கட்டுமான பணிகளிலும் முறைகேடு நடந்திருக்கலாம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளிப்படையாக விசாரணை கோரியிருப்பது பொதுப்பணித்துறை அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலி எழுத்தாளர்கள் பெயரில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரலாற்று பிழைகளுடன் அச்சடிக்கப்பட்ட நூல்கள் கோடிக்கணக்கில் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் நூலகங்களில் ஆய்வு நடத்தப்பட்டுப் புத்தகங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.

போலிப் புத்தகங்கள்

மாவட்டம் வாரியாக அப்புறப்படுத்தப்பட்ட போலிப் புத்தகங்கள்

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த 1,510 போலிப் புத்தகங்கள் அகற்றப்பட்டுள்ளன. இதில் அகல்விளக்கு பதிப்பகத்திடமிருந்து ₹2.13 லட்சம் மதிப்பில் 1,024 நூல்களும், பீனிக்ஸ் பதிப்பகத்திடமிருந்து ₹96,000 மதிப்பில் 486 நூல்களும் வாங்கப்பட்டிருந்தன.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 122 நூலகங்களில் இருந்து பீனிக்ஸ் பதிப்பகத்தின் 779 நூல்கள் மற்றும் அகல்விளக்கு பதிப்பகத்தின் 914 நூல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

திருநெல்வேலி: 2 ஆண்டுகளில் பீனிக்ஸ் பதிப்பகத்திடமிருந்து ₹1.80 லட்சத்திற்கு 948 நூல்களும், அகல்விளக்கு பதிப்பகத்திடமிருந்து ₹1.47 லட்சத்திற்கு 711 நூல்களும் வாங்கப்பட்டுள்ளன.

மதுரை சிம்மக்கல் மாவட்ட மைய நூலகத்தில் அகல்விளக்கு பதிப்பகத்தின் 998 நூல்கள், பீனிக்ஸ் பதிப்பகத்தின் 530 நூல்கள் கைப்பற்றப்பட்டு தனி அறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. ஈரோட்டில் 200 போலிப் புத்தகங்கள் அகற்றப்பட்டுள்ளன.

அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி

கோவை ஈ.வெ.ரா நூலகக் கட்டுமானத்திலும் ஊழலா?

கடந்த தி.மு.க ஆட்சியில் கோவையில் ஈ.வெ.ரா பெயரில் நூலகம் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டது (இறுதியில் ரூ.301.71 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது).

இதில் கட்டுமானப் பணிகளுக்கு மட்டும் ரூ.245 கோடியும், புத்தகங்கள் வாங்க ரூ.50 கோடியும் ஒதுக்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன்,"புத்தகங்கள் வாங்கியதிலேயே இத்தனை கோடி ரூபாய் முறைகேடு நடந்திருக்கிறது என்றால், கட்டடம் கட்டியதில் எவ்வளவு முறைகேடு நடந்திருக்கும்? உள்கட்டமைப்பு உறுதியாக இருக்கிறதா, ஒதுக்கப்பட்ட தொகை சரியாகப் பயன்படுத்தப்பட்டதா என்பதைப் பொதுப்பணித்துறை அமைச்சர் மறு ஆய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கனவே புத்தகக் கொள்முதல் குறித்து விசாரித்து வரும் நிலையில், அடுத்தகட்டமாக கட்டுமான டெண்டர் ஆவணங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன.

ADVERTISEMENT