தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரை: மேடையில் கண்கலங்கிய தவெக வேட்பாளர் சத்யபாமா, ஆறுதல் கூறிய முதலமைச்சர் விஜய்
செய்தி முன்னோட்டம்
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், எதிர்த்தரப்பினர் தன்னை பெண் என்றும் பாராமல் சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக விமர்சிப்பதாக கூறி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சத்யபாமா கண்கலங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் அக்டோபர் 6-ஆம் தேதி தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். பரப்புரைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய்க்கு முன்னதாகப் பேசிய சத்யபாமா, உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் விட்டுப் பேசினார். இதைக் கண்ட முதல்வர் விஜய், அவரை அரவணைத்து ஆறுதல் கூறி நம்பிக்கையுடன் இருக்குமாறு தேற்றினார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
அழுத சத்தியபாமா அவர்கள் தேற்றிய முதலமைச்சர் விஜய்.#CMVijayInDharapuram pic.twitter.com/GRZD08mSzF
— Actor Vijay Team (@ActorVijayTeam) September 30, 2026
தவெக வேட்பாளர்
சத்யபாமாவின் ஆவேசப் பேச்சு
மேடையில் பேசிய தவெக வேட்பாளர் சத்யபாமா,"ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் திமுக தொண்டருடன் நின்று பேசினால் கூட அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள். அப்படிப்பட்ட இயக்கத்தை திமுகவுடன் உடன்படிக்கை செய்துகொண்டு ஆட்சி அமைப்பேன் என எடப்பாடி பழனிசாமி கூறியதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை".
"ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் யாரும் இதை ஏற்க மாட்டார்கள் என்பதால் தான் முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலர் தவெகவில் இணைந்தோம். நாங்கள் தலைமைக்கு எதிராக செயல்பட்டோமே தவிர, இயக்கத்திற்குத் துரோகம் செய்யவில்லை."
"கடந்த 2 மாதங்களாக நான் செல்போன் கூட உபயோகிப்பதில்லை. சமூக வலைத்தளங்களில் என்னை மிகவும் கடுமையாகவும், ஆபாசமான வார்த்தைகளாலும் விமர்சிக்கிறார்கள். நான் ஒரு பெண் என்று கூடப்பார்க்காமல் அசிங்கமாகப் பேசுகிறார்கள். நான் அப்படி என்ன தவறு செய்தேன்?"
விஜய்
"மக்களுக்கு நல்லது செய்யவே தவெகவில் இணைந்தேன்"
"ஒரு ரூபாய் கூடச் செலவழிக்காமல் தமிழகத்தின் முதலமைச்சரானவர் விஜய். அவர் என்னைப் பணம் கொடுத்துக் கட்சிக்கு இழுத்திருப்பாரா? அப்படிச் செய்திருந்தால் மீண்டும் என்னை வேட்பாளராக அறிவித்திருப்பாரா? என் மீது தவறு இருந்தால் நான் எப்படித் துணிச்சலாக மக்களைச் சந்தித்து வாக்கு கேட்க முடியும்?"
"என் தொகுதி மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்றால் எதிர்க்கட்சியினரின் எத்தகைய விமர்சனங்களையும் தாங்கிக் கொள்கிறேன். தாராபுரம் தொகுதியில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில்தான், மக்களுக்கு நல்லது செய்யவே தவெகவில் இணைந்தேன். தொகுதியின் பிரச்சனைகள் அனைத்தும் முதல்வர் விஜய்யின் கவனத்திற்கு சென்றுவிட்டது. அடுத்த 6 மாதங்களில் தாராபுரம் தொகுதி பெரும் வளர்ச்சி பெறும்" என்று அவர் பேசினார்.