வங்கக்கடலில் நாளை மறுதினம் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நாளை உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நாளை மறுதினம் வாக்கில் உருவாகக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை
இந்த நிலையில், இன்று கனமழை பெய்யும் என சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. இதனை அடுத்து செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. நேற்று இரவு முதல் இம்மாவட்டங்களில் பல இடங்களில் பலத்த இடியுடன் மழை பெய்தது. சென்னையில், கிண்டி, வேளச்சேரி, ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம், கோட்டூர்புரம், தி.நகர், மயிலாப்பூர், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும், இம்மழை காலை 10 மணி வரை நீடிக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, சென்னையிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, டெல்டா மாவட்டங்களிலும் இன்று மழை பொழியும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.