வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையா?
இன்று காலை 5.30 மணிக்கு, தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ள சூழலில், அக்டோபர் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால், இன்று முதல் 17-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.
Twitter Post
மழை பெய்யக்கூடிய இடங்கள்
இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டதாவது, இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளுக்கு சென்று, வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னைக்கு, இன்று, அக்டோபர் 14 கனமழைக்கான எச்சரிக்கையும், நாளை அக்டோபர் 15, மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை மற்றும் நாளை மறுநாள் அக்டோபர் 16 அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மழை பாதிக்கக்கூடிய மாவட்டங்களின் ஆட்சியர்கள், மழை நிலவரங்களை கண்காணித்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உத்தரவிட்டு, தலைமைச் செயலர் கடிதம் அனுப்பியுள்ளார்.
பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் பதில்
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். "வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், ஒவ்வொரு மாவட்டங்களில் மழையின் பாதிப்பு வெவ்வேறு விதமாக உள்ளது. அதன் காரணமாக மழை பாதிப்பினை பொறுத்து அம்மாவட்டங்களின் ஆட்சி தலைவர்கள் பேரிடர் மேலாண்மை குழுவினர் அறிவுறுத்தல் பேரில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வார்கள்" என அமைச்சர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியாளர்களின் அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும் எனவும், அதற்காக பள்ளிக்கல்வித்துறையும் அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்குவதாக அவர் தெரிவித்தார்.