டெல்லியை சூழ்ந்த அடர்ந்த பனிமூட்டம்; விமானச் செயல்பாடுகள் பாதிப்பு
தலைநகர் டெல்லியில் இன்று காலை அடர்ந்த பனிமூட்டம் சூழ்ந்தது. இன்று அதிகாலையில் அடர்ந்த மூடுபனி இருக்கும் என்றும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 22 டிகிரி செல்சியஸ் மற்றும் 9 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய வானிலை காரணமாக விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ட்வீட்டில், டெல்லி விமான நிலையம் தரையிறங்குதல் மற்றும் புறப்படுதல் தொடரும் எனவும், CAT III இணங்காத விமான சேவைகள் மட்டும் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது. CAT III என்பது ஒரு வழிசெலுத்தல் அமைப்பாகும், இது பார்வைத்திறன் குறைவாக இருக்கும் போது அடர்த்தியான மூடுபனி மற்றும் மோசமான வானிலையின் போது விமானங்களை தரையிறக்க அனுமதிக்கிறது.
டெல்லியில் AQI சற்றே மேம்பட்டுள்ளது
டெல்லியில் இன்று காலை நிலவரப்படி காற்றின் தரக் குறியீடு(AQI) 334 ஆக பதிவாகியுள்ளது. இது 'மிகவும் மோசமான' பிரிவில் உள்ளது. எனினும் இது செவ்வாய்க்கிழமை காலை 398 ஆக இருந்தது. செவ்வாய் மாலையில், டெல்லியின் பல பகுதிகளில் நேற்று மழை பெய்தது. அதனால் AQI 358ஆக மேம்பட்டது. காற்றின் தரம் மேம்படுத்தப்பட்டதால் GRAP-IV தடைகளை ஆளும் அரசு நீக்கியது. முன்னதாக இந்த தடை காரணமாக அனைத்து கட்டுமான நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. காற்றின் தர அளவின்படி, 0 மற்றும் 50க்கு இடைப்பட்ட AQI 'நல்லது', 51-100 'திருப்திகரமானது', 101-200 'மிதமானது', 201-300 'மோசம்', 301-400 'மிகவும் மோசமானது' மற்றும் 401-500 'கடுமையானது' எனக் கருதப்படுகிறது.