அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் பேருந்துகள் நுழைவதற்கு கடும் கட்டுப்பாடுகள்
நவம்பர் 1 முதல், மின்சார, சிஎன்ஜி மற்றும் பிஎஸ் VI-க்கு உட்பட்ட டீசல் பேருந்துகள் மட்டுமே டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் உள்ள நகரங்களுக்கு இடையே செயல்பட அனுமதிக்கப்படும். டீசலில் இயங்கும் பேருந்துகளால் ஏற்படும் காற்று மாசுவை தடுப்பதற்காக காற்றின் தரத்திற்கான ஆணையம் நிர்வாகம்(CAQM) டெல்லிக்குள் நுழையும் பேருந்துகளுக்கான கட்டுப்பாடுகளை நிர்ணயித்துள்ளது. இறுதியில் மொத்தமாக மின்சார வாகனங்களுக்கு மாறும் நோக்கத்துடன் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், அடுத்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் எந்த நகரத்தில் இருந்து டெல்லிக்கு வரும் பேருந்துகளாக இருந்தாலும் அவை மின்சார, சிஎன்ஜி அல்லது பிஎஸ் VI-க்கு உட்பட்ட டீசல் பேருந்துகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசுவை தடுக்க அதிரடி தடைகள்
ஹரியானா மாநிலம் மற்றும் டெல்லிக்கு இடையே இயக்கப்படும் அனைத்து மாநில அரசு பேருந்து சேவைகளும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் EV/CNG/ BS-VI டீசல் பேருந்துகளாக மட்டுமே இருக்கும். மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களால் இயக்கப்படும் பேருந்து சேவைகளுக்கும் இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் உள்ள என்.சி.ஆர் நகரங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் நவம்பர் 1 ஆம் தேதி முதல் EV/CNG/ BS-VI டீசல் பேருந்துகளாக இருக்க வேண்டும். ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் உள்ள என்.சி.ஆர் அல்லாத நகரங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் ஜனவரி 1ஆம் தேதி முதல் நெறிமுறைப்படுத்தப்படும். உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் பேருந்துகளுக்கு இதே விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.