Loading...
ஆகாசவாணி பவன் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மீது டெல்லி காவல்துறை FIR பதிவு
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட எம்பிக்கள் மீது டெல்லி காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது

ஆகாசவாணி பவன் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மீது டெல்லி காவல்துறை FIR பதிவு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 07, 2026
11:15 am

செய்தி முன்னோட்டம்

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, டெல்லியில் உள்ள ஆகாசவாணி பவன் வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்ததாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட எம்பிக்கள் மீது டெல்லி காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் மற்றும் தேர்தல் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, இந்தியா கூட்டணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணைய தலைமையகமான நிர்வாச்சன் சதன் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர். ஆனால், தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், ஆகாசவாணி பவன் வளாகத்திற்குள் அனுமதியின்றி புகுந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது

எம்பிக்கள் கைது நடவடிக்கை

சுமார் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பவன் கேரா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்களைக் காவல்துறையினர் கைது செய்து, கிங்ஸ்வே கேம்பில் உள்ள புதிய போலீஸ் லைன் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த பேரணியில் ஆம் ஆத்மி மற்றும் திமுக ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறையின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு பேசிய ராகுல் காந்தி,"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே தேர்தல் ஆணையத்தைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்றால், நாட்டில் ஜனநாயகத்திற்கு என்ன மதிப்பு இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டவிரோதமாக அத்துமீறி நுழைந்த பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, டெல்லி காவல்துறை தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

ADVERTISEMENT