சட்டம் பேசுவோம்: மரண தண்டனைக்கு எதிராக வலுக்கும் குரல்கள்
ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள். மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பலரும் சமீபகாலமாக குரல் எழுப்பி வருகின்றனர். இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணையின் போது கலந்துகொண்ட பல வழக்கறிகர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். அதனையடுத்து, மரண தண்டனை விதிக்கப்படுவதை குறைப்பதற்கும், மரண தண்டனையிலிருந்து தப்பிக்க உதவும் காரணிகளின் பட்டியலை விரிவுபடுத்துவதற்கும் புதிய பாதுகாப்புச் சட்டங்களைச் சேர்ப்பதன் அவசியத்தை ஆராய உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. மரண தண்டனைகள் விதிக்கப்படுவதற்கு சில தளர்வுகளை உச்ச நீதிமன்றம் வரையறுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கால்வாசி நாடுகள் மரண தண்டனையை ஒழித்துவிட்டன
ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இந்த விவகாரத்தை மேலும் அலசி ஆராய இருக்கும் நிலையில், பெரும்பாலான வழக்கறிஞர்கள் இந்த விதியை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர். இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவிலும் மரண தண்டனைக்கு எதிரான கருத்துகள் அதிகரித்து வருகின்றன. இதற்கிடையில், முக்கால்வாசி நாடுகள் மரண தண்டனையை மொத்தமாக ஒழித்துவிட்டன. மரண தண்டனையை குறைக்கும் சூழ்நிலைகளை உருவாக்குவது அவசியம் என்றும், இதற்கு ஒரே மாதிரியான கட்டமைப்புகளை வரையறுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களைத் தவிர, பிற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று சட்ட ஆணையமும் கூறியுள்ளது.
மரண தண்டனைக்கு சாதகமாக இருக்கும் இந்திய அரசு
தவறாக ஒரு குற்றமற்றவருக்கு மரண தண்டனை விதித்துவிட கூடாது என்பதற்காகவே இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால், இந்திய அரசு மரண தண்டனையை ஒழிக்கும் விவாகரத்திற்கு செவி சாய்க்க மறுக்கிறது என்பது ஏமாற்றம் அளிக்கிறது. மரண தண்டனையை ஒழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் வரைவு தீர்மானத்திற்கு எதிராக இந்திய அரசு முன்பு வாக்களித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம், இந்திய தண்டனை சட்டத்திற்கு மாற்றாக முன்மொழியப்பட்ட பாரதீய நியாய சம்ஹிதா(பிஎன்எஸ்) என்ற மசோதாவும் மரண தண்டனைகளை குறைக்காமல் கூட்டியுள்ளது. இந்திய தண்டனை சட்டத்தின் படி, மரண தண்டனையை விதிக்கப்படக்கூடிய குற்றங்களின் எண்ணிக்கை 11 ஆகும். ஆனால், தற்போது முன்மொழியப்பட்டுள்ள பாரதீய நியாய சம்ஹிதா மசோதாவில் அது 15ஆக உயர்த்தப்பட்டுள்ளது.