வங்கக் கடலில் இன்று உருவாகிறது 'அக்வான்' புயல்: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்
செய்தி முன்னோட்டம்
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்காற்றழுத்த தெரிவித்துள்ளது. இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக் கடலில் இன்று அக்வான் புயலாக உருவாக வாய்ப்புள்ளது. தொடர்ந்து நாளை தீவிர புயலாக வலுப்பெற்று, அடுத்த இரண்டு நாட்களில் வடமேற்கு திசையில் ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி நகரக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தற்போது புயல் சின்னம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னைக்கே தென்கிழக்கே 760 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
மழை எச்சரிக்கை
தமிழக மாவட்டங்களுக்கான மழை எச்சரிக்கை
'அக்வான்' புயல் உருவாவதையொட்டி, IMD தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று, வட கடலோரத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், தென் தமிழகத்தில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.
நாளை, சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
நவம்பர் 18 & 19, சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.