
கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பதிவாகலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரியில் உள்ள நடுவட்டம் பகுதியில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. தென் மாநிலங்களில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 50 கி.மீ. வேகத்துடன் பலத்த காற்று வீசும் எனவும், இன்று முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை வானிலை
சென்னையில் வானம் மேகமூட்டம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலில், இன்று மற்றும் நாளையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ.,வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில், கோவை மற்றும் நீலகிரியில் நாளையும் சில இடங்களில் கனமழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.