LOADING...
தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Sep 12, 2025
07:57 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்று சில இடங்களில் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அறிக்கையில் கூறியுள்ளதாவது, கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவு மழை பதிவான மாவட்டமாக மதுரை அமைந்துள்ளது. மதுரை நகரில் 13 செ.மீ. மழை பதிவாக, அதனை தொடர்ந்து மதுரை தல்லாகுளம் மற்றும் கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டியில் தலா 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் கரூரின் கடவூரில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை

செப்டம்பர் 17ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு 

தென் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த மழை செப்டம்பர் 17ஆம் தேதி வரை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், செப்டம்பர் 15ஆம் தேதி வரை தமிழகத்தில் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சாதாரணத்தை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகும் வாய்ப்பும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும் நிலையில், இடையில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.